ISRAEL  PM Benjamin Netanyahu
ISRAEL PM Benjamin Netanyahu

போர் நிறுத்த்துக்கு வாய்ப்பில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம்  என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இன்னும் சுமுகமான தீர்வு எதுவும்  எட்டப்படவில்லை. காசாவில் அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்து வருவது  சக மனிதர்களை கவலையில் ஆழ்த்துகிறது. காசாவில் உள்ள மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. பயங்கரவாதத்துக்கு அடிபணிவது போல ஆகிவிடும். அதற்கு வாய்ப்பே இல்லை. ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துவைத்துள்ள 200-க்கும் மேலான பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

பேர்ள் ஹார்பர் தாக்குதலுக்குப் பிறகும், இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை நிராகரித்தது. அதே போன்று இஸ்ரேல் மீது அக்டோபர் 7 ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் போர் நிறுத்தம் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.இந்தப் போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்'' என கூறியுள்ளார்.

இதனிடையே பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் இன்று 93 பேர் பலியாகியுள்ளனர். அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8,306 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,457 பேர் குழந்தைகள், 2,136 பேர்  பெண்கள் மற்றும் 480 பேர் முதியவர்கள். இது தவிர, 21,048 பேர் காயமடைந்துள்ளனர். 1,050 குழந்தைகள் உட்பட 1,950 பேரை காணவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் தோல் நோய்கள் பரவலாக காணப்படுகிறது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பாலஸ்தீன பிரதமர் முஹம்மது கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும் தரைவழித் தாக்குதலும் நடத்தினர். இதில் 1400-க்கும் மேலான இஸ்ரேலியர்கள் பலியானார்கள். பதிலுக்கு இஸ்ரேல் ஹமாஸ் நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. காசா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாயின. பெண்கள், குழந்தைகள் என 5.000-த்துக்கும் மேலானவர்கள் பலியானார்கள்.

இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளில் சிலரை விடுவித்துள்ளனர். ஆனாலும், இஸ்ரேல் காசா நகரம் மீது தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு தயாராக அங்கு படைகளை குவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com