முதல்வர் பதவி குறித்து கருத்து வேறுபாடா? கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மறுப்பு!
முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து மோதல்கள் உருவாகும் என்று கூறப்படுவதை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மறுத்தார்.
இது தொடர்பான வதந்திகளுக்கு பதிலளித்த அவர், இந்த சந்தர்ப்பத்தை பா.ஜ.க.வை விமர்சிக்கவும் பயன்படுத்திக் கொண்டார். பா.ஜ.க. திறமையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க போராடி வருவதாகவும் கூறினார்.
கர்நாடக முதல்வராக தொடர்ந்து 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வேன் என்று சித்தராமையை கூறியுள்ளது குறித்து அவரிடம் கேட்டதற்கு, நாங்கள் பதவியேற்கும்போது அதிகாரப்பகிர்வு குறித்து ஏதேனும் குறிப்பிட்டோமா. ஏன் தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்குகிறீர்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. உண்மையில் பா.ஜ.க.விற்குள்தான் கருத்து மோதல் இருந்துவருகிறது. அதனால்தான் அவர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க போராடி வருகின்றனர் என்றார். தேர்தல் நடைபெற்று 6 மாதங்கள் ஆன பிறகும் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்காத மாநிலத்தை உங்களால் கூறமுடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தலைமையில் மாற்றம் வரும் என்று கட்சியில் சிலர் பேசிவந்த நிலையில் சிலர் கட்சிக்குள் வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நான் முதல்வராக ஐந்தாண்டுகள் ஆட்சியை பூர்த்தி செய்வேன். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சித்தராமையா கூறியிருந்தார்.
இதனிடையே கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங் கார்கே, முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சித் தலைமை என்னை முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு கூறினால், நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
தும்கூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். ராஜண்ணா, தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ஜி.பரமேஸ்வரா முதல்வராக வாய்ப்புள்ளது என்று பேசியிருந்தார். மேலும் சித்தராமையா முதல்வர் ஆவதை நானும், பரமேஸ்வராவும் ஆதரித்தோம். ஒருவேளை சித்தராமையா பதவியில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால், பரமேஸ்வரா முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் ராஜண்ணா இப்படி கூறியிருப்பது குறித்து சிவகுமாரிடம் கேட்டபோது, ஒருவேளை அவருக்கு முதல்வராகும் அதிர்ஷ்டம் இருக்கலாம் என்றார்.
இதற்கிடையில் துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சுரேஷ், முதல்வர் பதவி இப்போது காலியாக இல்லை. எனவே அதுபற்றி இப்போது விவாதிக்க தேவையில்லை. சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆட்சி செய்ய ஆதரவு உள்ளது. சித்தாமையாதான் இப்போது முதல்வர். அவரது ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. யார் ஆளவேண்டும் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். தனிப்பட்ட நபர்கள் இதுபற்றி பேசவேண்டாம் என்றார்.