இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தை தங்களுடைய நாடுகளின் நாணயமான ரூபாய் மற்றும் டாகாவில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன.
முன்னதாக உலக நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுவது அமெரிக்க டாலர். அமெரிக்காவின் டாலர் உலகத்தின் பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருப்பதால், உலகின் பல நாடுகள் அமெரிக்காவின் டாலரைப் பயன்படுத்தித் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்வதும் இறக்குமதி மேற்கொள்வதுமென வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
இதன் மூலம் வர்த்தகம் எளிதாக்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. அதே நேரம் அமெரிக்க டாலரை மட்டும் கொண்டு மிகப்பெரிய பன்னாட்டு பண பரிவர்த்தனை நடைபெறுவதால் மற்ற நாடுகளுடைய பணத்தின் மதிப்பு குறைகிறது. மற்ற நாட்டு பணத்தின் முக்கியத்துவம் உலக சந்தையில் பலவீனம் அடைகிறது.இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகள் அமெரிக்க டாலரைக் கொண்ட தங்களுடைய பன்னாட்டு பரிவர்த்தனையை குறைப்பதற்கும், தங்கள் நாட்டு பணங்களை கொண்ட வரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் அருகாமை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசம் தற்போது தங்கள் நாடுகளில் டாலர் பரிவர்த்தனையை குறைத்து, ரூபாய் மற்றும் டாகாவை கொண்டு தங்களுடைய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனையை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் பிராந்திய அளவிலான வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிப்பதோடு, தங்கள் நாட்டு பணத்திற்கான முக்கியத்துவம் உலக சந்தையில் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகின்றன.
இதுகுறித்து பேசிய வங்கதேச மத்திய வங்கியின் கவர்னர் அப்துல் ரவுப் தலுக்தர், “இந்தியா வங்கதேசம் இடையே ரூபாயை கொண்ட வர்த்தகப் பரிவர்த்தனை தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாயினுடைய பரிவர்த்தனை அதிகரிப்பதோடு, அதனுடைய மதிப்பும் உலக சந்தையில் உயரும். இதன் மூலம் அந்நிய செலாவணி குறையவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், வங்கதேசத்தின் டாகா, இந்தியாவின் ரூபாய் ஆகிய இருநாட்டு கரன்ஸிகளின் பரிமாற்றத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பரிவர்த்தனை நடவடிக்கையால் இந்தியாவுடனான வர்த்தக செலவினம் கணிசமாக குறையும்.
இந்தப் பரிவர்த்தனை 2023 செப்டம்பருக்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும், இந்த பரிவர்த்தனையை எளிதாக்கும் பொருட்டு இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அமைந்துள்ள வங்கிகளில் நோஸ்ட்ரோ கணக்கு தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இந்த கணக்குகள் வெளிநாட்டு பணங்களை மாற்றம் செய்வதற்கான எளிய வழியாகும் என்று தெரிவித்துள்ளார்.