அசோக் கெலோட்டுடன் அன்பை பொழியும் சச்சின் பைலட்.. காரணம் என்ன தெரியுமா?

அசோக் கெலோட்டுடன் அன்பை பொழியும் சச்சின் பைலட்.. காரணம் என்ன தெரியுமா?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வருமா சச்சின் பைலட் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றார். முதல்வர் அசோக் கெலோட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி எப்படியாவது அவரது ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

ஆனால், இன்று அதே சச்சின் பைலட் மீண்டும் பத்திரிகைச் செய்திகளில் இடம்பெறுகிறார். ஆனால், எப்படித் தெரியுமா? அசோக் கெலோட்டின் நீண்டகால எதிரியாக செயல்பட்டு வந்தவர் இப்போது அவருடன் சேர்ந்துகொண்டு ராஜஸ்தானில் மூன்றாவது முறை காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாக சரித்தம் இல்லை. ஆனால், இந்த முறை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சியிருந்தால்தான் (இரட்டை என்ஜின்) வளர்ச்சி சாத்தியம் என்று கூறி பா.ஜ.க. தீவிர பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், இரட்டை என்ஜினா? அப்படி என்றால் என்ன? இரட்டை என்ஜினில் ஒன்று இமாச்சல பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் பழுதாகிவிட்டது தெரியுமா என்கிறார் சச்சின் பைலட்.

நாங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம். இதுவரை ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றதில்லை. ஆனால், இந்த முறை நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. 76 சதவீத மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்கிறார் பைலட்.

அசோக் கெலோட் அரசு மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. எனவே நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்கிறார் பைலட். உங்கள் திட்டம்தான் என்று கேட்டதற்கு, “சொன்னைத் செய்வோம், செய்வதைச் சொல்வோம்”. கர்நாடகத்தில் நாங்கள் சில வாக்குறுதிகளைக் கொடுத்தோம். ஆட்சிக்கு வந்தபின் அவற்றில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதுதான் காங்கிரஸ் திட்டம். எனவே வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் பைலட்.

முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதுதான் எங்கள் முக்கிய குறிக்கோள், முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள்.  இளைஞர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும்.

கடந்த காலங்களில் அசோக் கெலோட்டுடன் மோதல் இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். மறப்போம், மன்னிப்போம். முன்னேறுவோம் என்பதுதான் எங்களது கோஷமாகும். தனிப்பட்ட நபர்களைவிட கட்சியும், பொதுமக்களும்தான் எங்களுக்கு முக்கியம்  என்றார் சச்சின் பைலட்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த மாதம் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com