சமீபமாக உச்சக்கட்ட விலையேற்றம் கண்டுள்ள தக்காளியை நினைத்து இல்லத்தரசிகளும் தக்காளிப் பிரியர்களும் வேதனையில் இருக்க, இன்னொரு புறம் பயிரிட்ட தக்காளியின் மீது கவனமாக இருக்க வேண்டிய சூழலில் விவசாயிகளும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதற்கு இந்தச் செய்தி சான்று.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா கோணி சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளார். தக்காளி நன்றாக விளைந்திருந்ததால் விலையேற்றத்தினால் மகிழ்ந்து கடந்த மூன்று நாட்களாக தக்காளிகளை பறித்து அருகில் உள்ள மார்க்கெட் சென்று விற்பனை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலையும் தக்காளிகளை அறுவடை செய்ய தனது தோட்டத்திற்கு சென்றார் தரணி.
அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தோட்டத்தில் சாகுபடி செய்யக் செய்திருந்த தக்காளி செடிகளில் இருந்து தக்காளி பழங்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. தோட்டம் முழுவதும் இருந்த தக்காளி செடிகளில் இருந்த எல்லாத் தக்காளி பழங்களும் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் தோட்டத்தில் புகுந்து 50 மூட்டை தக்காளியை பறித்துச் சென்றது தெரிய வந்தததையடுத்து, தரணி ஹளபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான 50 மூட்டை தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். எனவே திருட்டு ஆசாமிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தக்காளி திருடர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது இப்படியிருக்க தக்காளி திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வருவதால் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா அக்கி அலூரு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா என்ற வியாபாரி தக்காளி திருடப்படுவதை தடுக்க தனது கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மட்டுமல்ல. தற்சமயம் தக்காளிகளை முதல் போட்டு விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அனைவரும் கண்காணிப்புடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நகை பணம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை விட பசி போக்கும் அன்றாட உணவுக்குத் தேவைப்படும் தக்காளியைத் திருடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் விவசாயிகளும் கடை முதலாளிகளும் கூடத்தான்.