உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முழு தகவலையும் பார்ப்போம்.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் பாதுகாப்பிற்கும், மேன்மைக்கும் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் வந்துவிட்டதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிர் உரிமை தொகை, கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
அந்தவகையில் உத்தர பிரதேசத்திலும் பெண்கள் பாதுகாப்பிற்கு சில கட்டுபாடுகள் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. அவ்வப்போது சில விதிமுறைகளும் கட்டுபாடுகளும் கொண்டுவரப்பட்டுதான் வருகின்றன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. முன்னதாக பள்ளி, கல்லூரி பெண்களிடம் தொந்தரவு செய்யும் நபர்களை பிடிக்க ரோமியோ ஸ்குவாட் அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது ஜிம், யோகா பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது பெண்கள் ஜிம்மிற்கு வரும்போது அவர்களுக்கு பெண் ட்ரைனர்தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பயிற்சி அளிக்க கூடாது. இருபாலினர் மையமாக இருந்தாலும் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கக் கூடாது. பெண்களுக்கான பிரத்யேகா ஜிம், யோகா மையங்களில் ஆண் பயிற்சியாளரை பணியமர்த்தக் கூடாது என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பெண்களுக்கு ஆண் டெய்லர்களை வைக்கக்கூடாது. அவர்களுக்கு பெண் டெய்லர்களைதான் வைக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாவலர் இருக்க வேண்டும். அதேபோல் ட்ரெஸ் கடைகளிலும் பெண்களுக்கான செக்ஷனில் பெண்களையே பணியமர்த்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுபாடுகளை உத்தர பிரதேசத்தின் மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர் இந்தக் கட்டுபாடுகள் தாலிபான்கள் ஆட்சியை போல உள்ளதாக சொல்கிறார்கள்.