வாக்குச்சீட்டு அச்சடிக்க பணம் இல்லை! தேர்தலை நடத்த முடியாது!
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபட்சவும் பதவியை ராஜிநாமாச் செய்ய நேர்ந்தது.
இதையடுத்து அவசர நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ராஜபட்ச கட்சியின் ஆதரவின் பின்னணியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுகையில் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதனிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்தது. இதை எதிர்பார்த்து மக்களும் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், நிதித்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் வாக்குச்சீட்டு அச்சடிக்க பணம் இல்லை என்றும் இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தள்ளிப்போகலாம் என்றும் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் அச்சகத்தினரும் போதிய நிதி தரப்படாத நிலையில் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்க முடியாது என தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
போதுமான நிதியில்லை என்பதை காரணம்காட்டி இலங்கை அரசு தேர்தலை தள்ளிப்போடும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி அதிபர் விக்ரமசிங்கவுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன.
இதனிடையே திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி ஐக்கிய மக்கள் முன்னணி எம்.பி.க்கள் நடத்தவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையிலான தேசிய மக்கள் அதிகார முன்னணியும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. ராஜபட்ச கோஷ்டியிலிருந்து பிரிந்து சென்று புதிய அணி அமைத்துள்ள எம்.பி.க்களும் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை ஒத்திப்போடுவதானது ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதலாகும் என்றும் தேர்தலுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும், தேர்தலை ஒத்திப்போடும் முயற்சியும் தவறான முன்னுதாரணமாகிவிடும். மக்கள் தங்கள் பிரிதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதை தடுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல என்றும் இலங்கை வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விக்ரமசிங்கவுக்கு 10 சதவீத மக்கள் ஆதரவே உள்ளதாகவும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியானதால் தேர்தலை தள்ளிவைக்க அவர் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில்தான் ராஜபட்ச கட்சிக்கு அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2019 மற்றும் 2020 இல் நடந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெருவெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.