

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் வகையில், ஒரு முக்கிய மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சுங்கச் சாவடிகளில்(Toll Plazas) வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலையை குறைக்கும் வகையில் புதிய முறை அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் (Toll Plazas) ரொக்கப் பணம் செலுத்தும் முறை நிறுத்தப்பட உள்ளது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள இந்த நடவடிக்கை, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நீண்ட வரிசைகளைக் குறைப்பதையும், பயணிகளுக்கு நெடுஞ்சாலைப் பயணத்தை மேலும் சீராக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய அமைப்பின் கீழ், வாகன ஓட்டிகள், ஃபாஸ்டேக் அல்லது UPI மூலமாக மட்டுமே இனி கட்டணம் செலுத்த முடியும்.
ஃபாஸ்டாக் இல்லையென்றால், ஓட்டுநர் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்றாலும் அவர் வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஏதேனும் ஒரு சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், அதிகாரிகள் மின்னணு அறிவிப்பை (e-notice) அனுப்பலாம். மூன்று நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினால், சுங்கக் கட்டணத் தொகையைப் போல இருமடங்கு அபராதமாக விதிக்கப்படலாம்.
மேலும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தகராறுகளையும், அடையாள அட்டைகளின் தவறான பயன்பாட்டையும் தடுக்க மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதாவது இனிமேல் அடையாள அட்டையைக் காண்பிப்பதன் மூலம் மட்டும் சுங்க விலக்கு பெறும் நடைமுறை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டண விலக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அரசாங்கம் தற்போது கவனித்து வருகிறது. சுங்க விலக்குகள் தனிநபர்களுக்கு அல்ல, அவர்களின் பதவி அல்லது அரசு அலுவலகத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. சுங்கச்சாவடி மையங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி விலக்கு பெறும் முறைக்கு மாற்றாக, இனி தகுதியுள்ள பயனர்கள் "விலக்கு அளிக்கப்பட்ட FASTag-களை" (Exempted FASTags) வைத்திருக்க வேண்டும். சுங்கக் கட்டணச் சலுகைகள் அரசு வாகனங்களுக்கு மட்டுமே, அரசு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு அல்ல.
அதன்படி, வரும் 10ம்தேதி முதல் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.