வாகன வாரண்டி பற்றிய கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் புதிய அறிவிப்பு.

வாகன வாரண்டி பற்றிய கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் புதிய அறிவிப்பு.
Published on

த்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை 'ரைட் டு ரிப்பேர்' என்ற புதிய விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நுகர்வோருக்கு பேருதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

நாம் புதியதாக ஒரு பைக் அல்லது கார் வாங்கும்போது, முதல் ஒரு ஆண்டிற்கு வாகனத்திற்கான இலவச சர்வீஸ் சேவை வழங்கப்படும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நம் வண்டியை இலவசமாகவே சர்வீஸ் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அந்த ஒரு ஆண்டுக்குள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு தான் நமது வாகனத்தை எடுத்துச் சென்றிருப்போம். இலவச சர்வீஸுக்கு பிறகு ஏற்படும் பழுதுகளை நாம் வெளியேயே பார்த்துக்கொள்வோம். 

இது ஏன் செய்யப்படுகிறது என்றால், ஓராண்டுக்குள் வாகனம் ஏதாவது பழுதானால், அதனுடைய சர்வீஸ் கட்டணம் அதிகமாகும். ஒருவேளை வாரண்டி காலத்திற்குள் வெளியே உள்ள மெக்கானிக்கிடம் நமது பிரச்சனைகளை நிவர்த்தி செய்தால், வண்டிக்கான உண்மையான வாரண்டி போய்விடும். இதனால் சின்ன சின்ன பிரச்சனை என்றால் கூட சர்வீஸ் சென்டருக்கு வாகனத்தை எடுத்துச் செல்வார்கள். 

ஆனால், இந்த நிலையானது விரைவில் மாறப்போகிறது. மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை 'ரைட் டு ரிப்பேர்' என்ற புதிய அம்சத்தை தொடங்கியுள்ளது. இதற்காகவே தனியாக ஒரு இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அங்கீகரிக்கப் படாத மெக்கானிக் ஷாப்களுக்கும் சென்று ஒருவர் தனது வாகனத்தை சர்வீஸ் செய்தாலும், வாகனத்தின் வாரண்டி எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 

ஹோண்டா மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் ஏற்கனவே இணைந்து விட்டன. சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டாலும் எப்படி நாமாகவே இதை சரி செய்யலாம் என்ற தரவுகளும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு மெக்கானிக்குகள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்ற விவரமும் இதிலேயே கிடைக்கிறது. 

இதனால் நாம் வாங்கும் பொருளை நம் விருப்பத்துடன் பழுதுபார்க்கும் உரிமையை இது வழங்குகிறது. மேலும் இதுநாள்வரை எந்தெந்த வாகனத்திற்கு எம்மாதிரியான பாகங்கள் சரியானது போன்ற தகவல்களை நிறுவனங்கள் வெளியிடாது. ஆனால் இந்த ரைட் டு ரிப்பேர் திட்டத்தின் கீழ், வாகனத்தின் பாகங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மூன்றாம் தரப்பு ஊழியராக இருந்தாலும் அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

மேலும் இந்த திட்டமானது, நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. நுகர்வோர் சாதனங்கள், எலக்ட்ரானிக், விவசாய உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உபகரணங்கள் என நான்கு முக்கிய துறைகளை இது உள்ளடக்கியுள்ளது.  அதாவது வாகனங்கள் மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் தனிப்பட்ட சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கூட இந்தத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். 

சாம்சங், ஆப்பிள், பானாசோனிக், எல்ஜி, Oppo போன்ற பல முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com