கண் பார்வை சரியாக தெரியவில்லை என்றால், நாம் பார்வை பரிசோதனை செய்து அதற்கேற்றவாரு கண்ணாடி போடுவோம். ஆனால், இனி கண்ணுக்கு சொட்டு மருந்து போட்டாலே நல்ல கண் பார்வை தெரியுமாம்.
கண் பார்வை முற்றிலும் இழப்பது, மங்கலாக தெரிவது, சிறுவயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு இருப்பது, நடுத்தர வயதில் இயற்கையாக பார்வை குறைபாடு ஏற்படுவது என ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு விதமான பார்வை குறைபாடு ஏற்படும்.
இவர்கள் மருத்துவரைப் பரிசோதித்து கண்ணாடி போடும்போது, சிலர் எப்போதும் கண்ணாடி அணிந்திருக்கும்படி அறிவுரைக்கப்படுவர். சிலர் படிக்கும்போது மட்டும் கண்ணாடி போடுவர், மேலும் சிலர் தலைவலிக்கு கண்ணாடி அணிவர்.
இந்த வகைகளில் நடுத்தர வயதில் இயற்கையாகவே கண் பார்வை குறைபாடை சந்திப்பவர்களுக்கும் ப்ரெஸ்பியோபியா குறைபாடு உள்ளவர்களுக்கும் புதிய கண் சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்தை என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மருந்தின் பெயர் 'பிரெஸ்வு' (PresVu) ஆகும்.
இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் படிக்கும்போது எழுத்துக்கள் தெரியாதவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த மாதம், இந்த கண் சொட்டு மருந்துக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
முக்கால் வாசி பேர் படிக்கும்போது மட்டுமே கண்ணாடி அணிவதால், அவர்களுக்கு இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கண்ணாடி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால், கணினி போன்றவற்றைப் பார்க்கும்போது யுவி ரேஸ் உள்ள கண்ணாடிகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
அதேபோல், அதிக பவர் உள்ளவர்கள், கண்ணாடி அல்லது லென்ஸ் அணியலாம். லென்ஸைத் தொடர்ந்து பயன்படுத்துவதும் நல்லதல்ல. வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் வீட்டிற்கு வந்ததும், தூங்குவதற்கு முன்பும் கழற்றி வைத்துவிடுவது நல்லது.