2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதுதான் முக்கியம். பிரதமர் வேட்பாளர் யார் என்பதல்ல என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில், வருகிற 23 ஆம் தேதி கூட்டியுள்ள எதிர்க்கட்சி கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் தாம் பங்கேற்க இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பதுதான் இன்றையத் தேவை.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது இப்போதுள்ள பிரச்னை அல்ல. கடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் யாரும் பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தவில்லை. ஜனதா கட்சி தேர்தலில் வென்றது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார் என்று பவார் சுட்டிக்காட்டினார்.
1977 இல் நடந்தது ஏன் இப்போது நடக்கக்கூடாது என்று கேட்ட பவார், பா.ஜ.க.வுக்கு மாற்றான ஒரு பொறுப்பான ஆட்சியைத் தருவது மக்களுக்கு நாம் செய்யும் கடமையாகும் என்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பிரதமர் யார் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் பவார் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்தலாம் என்ற யோசனை வரவேற்கத்தக்கது. அது பற்றித்தான் 23 ஆம் தேதி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்த நான் முழு முயற்சி எடுப்போம் என்றார் அவர்.
மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடந்த வகுப்பு மோதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், பா.ஜ.க.வுடம் அதன் தோழமை அமைப்புகளும் மகாராஷ்டிரத்தில் அமைதியான சூழலை கெடுக்க முயல்கின்றன.
கர்நாடகத்தில் பா.ஜ.க.வினர் ஹனுமன் பெயரில் ஹிந்துத்துவாவை திணிக்க முயன்றனர். ஆனால் மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். மகாராஷ்டிரத்திலும் அவர்களின் முயற்சி எடுபடாது என்றார் பவார்.