ஆவின் நிறுவனத்திற்கு யாரும் போட்டியாக வரமுடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!

ஆவின் நிறுவனத்திற்கு யாரும் போட்டியாக வரமுடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!
Published on

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது பால் தட்டுப்பாடு என்பதே இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் அளவை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அமுல் நிறுவனம், கர்நாடகா மாநிலத்தின் நந்தினி நிறுவனத்தோடு போட்டியிட்டு பால் கொள்முதல் செய்வதாக வந்த செய்திகளால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்தால் அமுல் போன்ற வெளிமாநில நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரத்தில் இறங்கியது.

கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும், இதனால் ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் பாதிக்கப்படும என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார்.

பால்வளத்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட மனோ தங்கராஜ்க்கு அமுல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எந்த விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன், ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை தி.மு.க அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர், பால் தட்டுப்பாடு இருப்பதாக வரும் செய்திகள் தவறானவை என்றும் பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக விளக்கமளித்திருக்கிறார். எந்தவொரு போட்டி வந்தாலும் ஆவின் நிறுவனம் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சராசரியாக தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், பால் கொள்முதல் அளவை தினமும் 75 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக மாற்றப்படாமல் இருந்த பால் கொள்முதல் விலையும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், பொது இடங்களில் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் செங்கோலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டரில் தெரிவித்த கருத்து பலத்த எதிர்ப்பையும்

விமர்சனத்தை சந்தித்து. அதையெடுத்து, டிவிட்டர் செய்தியை நீக்கியவர், அது குறித்து கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com