

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
வடகிழக்கு மாநில மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்பவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணியும் 33 இடங்களை வென்றுள்ளன. கடந்த தேர்தலில் வென்ற இடங்களைவிட இப்போது 11 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன என்றாலும் பெரும்பான்மைத் தேவையான இடங்களைவிட இரண்டு இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளன. பழங்குடியினர் கட்சியான திப்ரா மோதா 42 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களை வென்றுள்ளது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
நாகாலாந்து மாநில தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.) மற்றும் பா.ஜ.க. இணைந்த கூட்டணி 37 இடங்களை வென்றுள்ளது. என்.டி.பி.பி. 25 இடங்களையும், பா.ஜ.க. 12 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. நாகாலாந்து மக்கள் கட்சி 5 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
நாகாலாந்தில் முதல் முறையாக இரண்டு பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த ஹெகானி ஜகாலூ திமாபூர் தொகுதியிலும், சல்ஹுடுனோனு க்ரூஸ் அங்கமித தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
மேகாலயத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களை வென்று அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன. எனினும் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைக்க பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது. ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி மீண்டும் கான்ராடு சங்மா தலைமையில் ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிகிறது.
5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிபெற்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கஸ்பாபெத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகர், சின்சுவாட் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வினி லட்சுமண் ஜெகதாப் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் சாகர்திகி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் பைரோன் விஸ்வாஸ் வெற்றிபெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் தொகுதியில் அகில ஜார்க்கண்ட மாணவர் சங்க வேட்பாளர் சுனிதா செளதுரி வெற்றிபெற்றுள்ளார். அருணாச்சல மாநிலத்தில் லும்பா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் டிஸெரிங் லாமு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.