டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி இல்லை முதல்வர் ஸ்டாலின் உறுதி !

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு எந்த காலத்திலும் அனுமதி இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய திமுக, காங்கிரஸ்,விசிக சட்டமன்ற உறுப்பினர்கள், நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும், மாநில அரசிடம் அனுமதி பெறாமல் சோதனையில் ஈடுபட்டது தவறு என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்தபோது, தானும் ஒரு 'டெல்டாகாரன்' என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினரான இருந்தாலும் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தின் ஏல அறிவிப்பை திரும்பபெறவேண்டும் என்று ஏற்கனவே மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் " தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, புதிய நிலக்கரி திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், நிலத்தைக் கையகப்படுத்தாது என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com