

இனி உங்கள் பயணத் திட்டமிடல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். காரணம், வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களுக்கான டிக்கெட் ரத்து விதிகளை ரயில்வே அமைச்சகம் கடுமையாக்கியுள்ளது. இந்த ரயில்களில் தாமதமாக டிக்கெட்டை ரத்து செய்தால், நீங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற இயலாது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்ரித் பாரத்-2 ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திரும்பப்பெறும் விதிகளில் ரயில்வே அமைச்சகம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்குள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகள் எந்த ஒரு பணத்தையும் திரும்பப் பெற முடியாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த இரண்டு ரயில் சேவைகளும் வழக்கமான ரயில்களில் இருந்து தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் பயணிகள் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறலாம் என்று இருக்கிறது. ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித் பாரத் -2 ரயில்களுக்கு இந்த கட் ஆஃப் காலம் எட்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதால் இருக்கைகள் குறைவாக பயன்படுத்தப்படுவதாகவும், பல சந்தர்ப்பங்களில் புறப்படுவதற்கு சிறிது நேரமே இருக்கும் சமயத்தில் ரத்து செய்யப்படுவதால் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளால் கூட உறுதிப்படுத்தப்பட்ட பெர்த்களை பெற முடியவில்லை என்பதால் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், தேவையற்ற முன்பதிவுகளை தடுப்பதற்காகவும் பிரீமியம் ரயில்களுக்கான ரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் கடைசி நிமிட ரத்து செய்தல்களை குறைத்து, படுக்கை பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிரீமியம் ரயில்கள் வழக்கமான ரயில்களை போல் இல்லாமல் 100% உறுதிபடுத்தப்பட்ட படுக்கை கொள்கைகளில் இயங்குகின்றன.
திருத்தப்பட்ட விதிகளின்படி, புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால், கட்டணத்தில் 25% கழிக்கப்படும். புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கும் எட்டு மணி நேரத்திற்கும் இடையில் ரத்து செய்தால், கட்டணத்தில் 50% கழிக்கப்படும் என்றும், புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் முழு கட்டணமும் கழிக்கப்படும். இதனால் எந்த பணத்தையும் திரும்பப் பெற முடியாது. இது வழக்கமான ரயில்களை விட கடுமையான கொள்கையை குறிக்கிறது.
பிற ரயில்களுக்கான ரத்து விதிகள் மாறாமல் உள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் அம்ரித பாரத் 2 தவிர மற்ற ரயில்களுக்கு தற்போதுள்ள ரத்து அமைப்பு தொடர்கிறது. அதாவது புறப்படுவதற்கு 48 முதல் 12 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்யப்பட்டால் 25% கட்டணம், புறப்படுவதற்கு 12 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யப்பட்டால் 50% கட்டணம், புறப்பட்ட 4 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணத்தை திரும்பப் பெற இயலாது என்ற ரத்து விதிகள் மாறாமல் உள்ளன.