

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் ,தொடர்ச்சியாக அனைத்து பக்கங்களிலும் இருந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கட்சிகள் கிட்டத்தட்ட அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஓபிஎஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோரின் அரசியல் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணைய முயற்சி செய்து வருகிறது. ஆனால், அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.கடந்த கால மனக்கசப்புகளுக்கு மத்தியில் திருமாவளவன் ராமதாசுடன் ஒரே கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை. ஏற்கனவே இரண்டாக உடைந்த பாமக கட்சி, ஒரு பக்கம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலும் , மறுபக்கம் அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலும் இயங்கி வருகிறது. அன்புமணி தலைமையிலான பாமக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து விட்டது , இறுதி நிலவரப்படி அன்புமணி பாமக பிரிவிடமே மாம்பழச் சின்னம் உள்ளது. மாம்பழச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பினர் வழக்கு தொடுத்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி பாமக இணைந்துள்ளதால், அதற்கு எதிராக உள்ள திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திடமும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகிறார். ஆனாலும், பெரும்பாலும் திமுகவுடன் கூட்டணி வைப்பதையே ராமதாஸ் பெரிதும் விரும்புகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட திமுகவுடன் கூட்டணி வைக்கவே ராமதாஸ் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், அதற்கு மாறாக அன்புமணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
திமுகவை விட்டு வெளியேறுவோம்!
பாமக , விசிக என்ற போட்டிகளுக்கு மத்தியில் திமுக பெரும்பாலும் திருமாவளவன் பக்கமே நிற்க விரும்புகிறது. நீண்ட காலமாகவே திமுக ஆட்சியில் இல்லாத போதும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றனர். கூட்டணிக்குள் குழப்பம் , கலகம் போன்றவற்றை எப்போதும் திருமாவளவன் ஏற்படுத்தியது இல்லை. திமுகவிற்கு நீண்ட கால நண்பனாகவும் நண்பகத் தன்மை மிக்கவராகவும் இருப்பதால் பாமகவை கூட்டணியில் சேர்க்க திமுக தயக்கம் காட்டி வருகிறது. திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தலைமையிடம் ராமதாசை கூட்டணியில் சேர்க்க வலியுறுத்தினாலும் , தலைமை முடிவெடுக்க தயங்குகிறது.
ஏற்கனவே ஒரு சில பேட்டிகளில் திருமாவளவன் , "திமுக கட்சி யாரை வேண்டுமானாலும் கூட்டணி சேர்ப்பது அவர்களின் ஜனநாயக விருப்பம், அவற்றில் நாங்கள் எப்போதும் தலையிட விரும்பியதில்லை" என்று கூறியிருந்தார். அதேநேரம் தங்களுக்கும் சுயமாக முடிவெடுக்க சுதந்திரம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இன்று தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த திருமாவளவன் "சமூகத்தில் வெறுப்பை விதைத்து பிரிவினை ஏற்படுத்தக்கூடிய கட்சிகளுடன் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜக மற்றும் பாமக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. இது சம்பந்தமாக திமுகவிற்கு எந்தவித அழுத்தமும் நாங்கள் கொடுக்க மாட்டோம். திமுக எங்களது நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை , எங்களுக்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளார்.