வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை: மின்சார வாரியம் விளக்கம்!

வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை: மின்சார வாரியம் விளக்கம்!
Published on

திமுக அரசு புதிதாகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டண விகிதப்படி வீடுகளுக்கு 12 சதவிகிதம் முதல் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இப்படி மின் கட்டணத்தை உயர்த்தியபோதிலும் மின்சார வாரியத்துக்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனில் அடுத்த ஐந்து ஆண்டுக்கு வருடத்துக்கு ஆறு சதவிகிதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவிகிதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியதோடு, அதற்கான ஒப்புதலையும் வழங்கி இருந்தது.

இந்நிலையில், நேற்று மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்சார வாரிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு புதிதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ’வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை தவிர, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிக குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. இதனோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணங்கள் உயர்த்தப்படாதது மட்டுமின்றி, வணிகம் மற்றும் தொழில் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com