2025 மருத்துவ நோபல் பரிசு: நோய் எதிர்ப்புச் சக்தியின் 'பாதுகாப்பு வீரர்கள்' கண்டுபிடிப்பு!

Fred Ramsdell, Mary E. Brunkow and Shimon Sakaguchi
Fred Ramsdell, Mary E. Brunkow and Shimon SakaguchiPIC : oncodaily
Published on

ஆல்பிரட் நோபலின் உன்னதப் பார்வையில் தொடங்கப்பட்ட நோபல் பரிசு, மனித குலத்திற்கு மகத்தான பங்களிப்பு செய்தவர்களைக் கௌரவிக்கும் உலகப் பெருமைமிகு விருதாகும்.

இந்த விருதுகளின் நிறுவனர் ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் அறிவியல் உலகில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ள வெற்றியாளர்கள் தங்களின் உயரிய விருதைப் பெற உள்ளனர். 

2025-ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது.

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி, சொந்த செல்களைத் தாக்காமல் தடுக்கும் நுட்பம் குறித்த மகத்தான கண்டுபிடிப்புகளுக்காக, விஞ்ஞானிகள் மேரி புரூன்கோவ் (Mary Brunkow), ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஷிமோன் சாககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு இந்த உயரிய கௌரவம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று விருது வழங்கும் அமைப்பான கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Institute) தெரிவித்துள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தியின் 'பாதுகாவலர்கள்' கண்டுபிடிப்பு

இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட முக்கியக் காரணம், அவர்கள் "நோய் எதிர்ப்புச் சக்தியின் புறத் தாங்குதிறன் (Peripheral Immune Tolerance)" குறித்து மேற்கொண்ட அடிப்படை ஆராய்ச்சியே ஆகும்.

ஒவ்வொரு நாளும் பல லட்சம் நுண்கிருமிகளிடமிருந்து உடலைக் காக்கும் வலிமையான நோய் எதிர்ப்புச் சக்தி, தவறுதலாக நம் சொந்த உறுப்புகளைத் தாக்கும் அபாயம் உள்ளது.

இதைத் தடுக்கும் பாதுகாப்பு வேலையைச் செய்யும் கட்டுப்படுத்தும் T செல்கள் (Regulatory T Cells) என்னும் "பாதுகாவலர்களை" இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஷிமோன் சாககுச்சி (Shimon Sakaguchi): 1995-ஆம் ஆண்டு, சாககுச்சி முதல் முக்கிய கண்டுபிடிப்பைச் செய்தார். நோய் எதிர்ப்பு சக்தி, தீங்கு விளைவிக்கும் செல்களைத் தைமஸ் சுரப்பியில் மட்டுமே அகற்றும் என்ற 'மையத் தாங்குதிறன்' கோட்பாடு நிலவியபோது, சாககுச்சி அதற்கு மாறாகச் செயல்பட்டு, தன்னுடல் தாக்கும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் இதுவரை அறியப்படாத புதிய வகைக் காப்புச் செல்களை (immune cells) கண்டறிந்தார்.

மேரி புரூன்கோவ் மற்றும் ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Mary Brunkow & Fred Ramsdell): 2001-ஆம் ஆண்டு, இந்தக் குழு Foxp3 என்றழைக்கப்படும் ஒரு மரபணுவில் ஏற்படும் பிறழ்வு (Mutation), ஒரு குறிப்பிட்ட வகை எலிகளுக்குத் தன்னுடல் தாக்கும் நோய்கள் வரக் காரணமாகிறது என்பதைக் கண்டறிந்தது.

மேலும், மனித உடலில் இந்த மரபணுவில் ஏற்படும் பிறழ்வு, IPEX என்ற தீவிரமான தன்னுடல் தாக்கும் நோயை ஏற்படுத்துகிறது என்பதையும் அவர்கள் நிறுவினர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சாககுச்சி, பிரூன்கோவ் மற்றும் ராம்ஸ்டெல் ஆகியோரின் கண்டுபிடிப்புகளை இணைத்து, இந்தச் செல்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்கினர்.

அதாவது, Foxp3 மரபணுதான், உடலின் 'பாதுகாப்புக் காவலர்கள்' போலச் செயல்படும் கட்டுப்படுத்தும் T செல்களை உருவாக்குகிறது.

இந்த T செல்கள் மற்ற நோயெதிர்ப்பு செல்களைக் கண்காணித்து, தவறுதலாக உடலின் சொந்த உறுப்புகளைத் தாக்காமல் தடுத்து, அமைதியைக் காக்கின்றன.

நோபல் பரிசுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த எளிய கண்டுபிடிப்புகள், இனி வரும் காலங்களில் புற்றுநோய், தன்னுடல் தாக்கும் நோய்கள் (உடல் தன்னைத் தானே தாக்கும் நோய்கள்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கான புதிய மற்றும் மிகச் சிறந்த சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க வழி வகுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

பரிசும் பாரம்பரியமும்

ஆறு நோபல் பரிசுகளில் முதலாவதாக அறிவிக்கப்பட்ட மருத்துவத் துறைக்கான இந்த விருது, சுமார் ரூபாய் 10.65 கோடி பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.

1901 முதல் 2024 வரை, மருத்துவத்திற்கான நோபல் பரிசு 115 முறை 229 வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் அறிவிக்கப்பட்ட பின், இயற்பியல் (செவ்வாய்க்கிழமை), வேதியியல் (புதன்கிழமை), இலக்கியம் (வியாழக்கிழமை) ஆகிய துறைகளுக்கும், தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளன.

பொருளாதாரத்திற்கான ஆல்பிரட் நோபல் நினைவுப் பரிசு அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com