பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரத்தில், அரசியல் தொடர்பான வாக்குவாதத்தின் போது கார் டிரைவர் ஒருவர், பயணியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள், மிர்சாபூர்-பிரயாக்ராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வாடகை காரில் பயணித்த ராஜேஷ் துபே (52) எனும் பயணி ஒருவருக்கும், அந்த கார் டிரைவர் அம்ஜத் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து இருவரும் காரசாரமாக பேசி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்ஜத் விமர்சித்துள்ளார். இதற்கு ராஜேஷ் துபே ஆட்சேபம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். வாக்குவாதம் கடுமையானதை தொடர்ந்து, ராஜேஷை அவரது வீட்டின் அருகே இறக்கி விட்ட ஓட்டுனர் அம்ஜத், திடீரென அவர் மீது காரை ஏற்றினார். இதில் தலை நசுங்கிய ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மிர்சாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மிஷ்ரா தெரிவித்ததாவது" ராஜேஷ் துபே, மிர்சாபூரில் நடைபெற்ற தனது சகோதரர் ராகேஷ் துபேயின் மகனின் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பியுள்ளார். இவரோடு உடன் பயணித்த உறவினரின் தகவல்படி, ராஜேஷிற்கும் சக பயணிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் எழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டிய அம்ஜத் மிக கடுமையான வார்த்தைகளால் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தாக்கி பேசியுள்ளார். மோடியையும், யோகியையும் அவமானப்படுத்தும் விதமாக பேசிய அம்ஜத்திற்கு ராஜேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காரில் உள்ள மற்ற பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்தி
உள்ளனர். அவர்கள் அனைவரும் அவரவர் இடம் வந்ததும் ஒவ்வொருவராக இறங்கியுள்ளனர். அம்ஜத் காரை பாதி வழியிலேயே நிறுத்தி ராஜேஷை இறங்கச் சொன்னதாக தெரிகிறது. ராஜேஷ் துபே இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் தனது சொகுசு காரை வேகமாக அவர் மேல் மோதி, கொன்றதாக தெரிகிறது.
அப்பகுதி மக்கள் மாவட்ட குற்றவியல் நடுவரும், கண்காணிப்பாளரும் அங்கு வந்து உடனே குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பல அதிகாரிகள் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அரசியல் தொடர்பான விவாதம் கொலையில் முடிந்தது மிர்சாபூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.