ராணுவ உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்: வடகொரியா அதிரடி!

ராணுவ உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்: வடகொரியா அதிரடி!
Published on

வடகொரியா ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.

மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என வடகொரியா தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இருப்பினும் வடகொரியா எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து இந்த ஏவுகணைகளை சோதனை செய்து வருவது உலக நாடுகளை பதட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. எனினும் தற்போது எல்லா தடைகளையும் மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது. இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது.

ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இந்த ஏவுகணை சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது

இது குறித்து "ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல்" என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும் எதனை பற்றியும் கவலை கொள்ளாத வட கொரியா," தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இது போன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று" என்றும் வடகொரியா பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் மிகவும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையான ஹ்வாசாங் 17-ஐ வடகொரியா வெற்றிக்கரமாக சோதித்தது.

அமெரிக்க நிலப்பரப்பில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட வகையில் இது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com