அமெரிக்க வெள்ளை மாளிகையை 24/7 கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்டை வடகொரிய ராணுவம் விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன யுகத்திலும் சர்வாதிகாரம் நடக்கும் நாடு எதுவென்று கேட்டால், அது வடகொரியா தான். அங்கு ‘கிம் ஜாங் உன்’ என்பவருக்குக் கீழ் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மக்கள் அவர்கள் விரும்பியபடி எதையுமே செய்ய முடியாது. அவர்களுக்கென்று மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் மர்மமான நாடாக இருப்பதால் அது மற்ற நாடுகளில் இருந்து தனித்தே உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் உளவு சேட்டிலைட் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி இருந்தது வடகொரியா. அதுவும் குறிப்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையை கண்காணிப்பதற்காக என அவர்களே தெரிவித்தனர். மேலும் அமெரிக்க ராணுவ தளவாடங்கள், தலைமையகங்கள் போன்றவற்றையும் கண்காணித்து வருவதாக வடகொரியா தெரிவித்தது.
அவர்களின் உளவு சேட்டிலைட் போட்டோ எடுத்து அனுப்பிய இடங்கள் பற்றி வடகொரியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் முக்கியமான இடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் வெறும் பயிற்சிக்காக எடுக்கப்பட்டது எனவும், வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதன் முக்கிய பணியை சேட்டிலைட் தொடங்கிவிம் என வடகொரியா திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
உளவு சேட்டிலைட்டை, மேலும் துல்லியமாக படங்களை எடுப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிவித்த வடகொரியா, இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்து சாட்டிலைட் தனது வேலைக்காக தயாராக இருக்கும் எனக் கூறியுள்ளனர். இருப்பினும் வடகொரியா சொல்வது உண்மைதானா? அந்த சேட்டிலைட் எப்படி வேலை செய்கிறது? என எந்த நாடும் உறுதியாகக் கூறவில்லை.
அவர்களின் உளவு சேட்டிலைட் எடுத்த புகைப்படங்களாக சொல்லப்படும் போட்டோக்கள் பொதுவெளியில் வெளியிடப்படாத நிலையில், அந்த உளவு சேட்டிலைட் பற்றி அதிக சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இத்தகைய சேட்டிலைட்டை அனுப்பும் அளவுக்கு வடகொரியாவிடம் போதிய தொழில்நுட்பம் இல்லை. மேலும் கடந்த காலங்களில் இதே போல சேட்டிலைட் குறித்த பல பொய்யை அவர்கள் கூறியுள்ளனர் என்பதால், இதுவும் பொய்யாகவே இருக்கும் என நம்புகின்றனர்.
இருப்பினும் இவர்களைப் பற்றிய உண்மை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்பதால், இதை முழுவதும் பொய் என்றும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.