வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. கடந்த 2 நாட்களாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வை மேற்கொண்டது.
வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது பாதுகாப்பு குறித்தும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்கள். பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து கண்காணிப்பது குறித்தும், கூடுதல் பாதுகாப்பு தருவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
'வீடியோ பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. ஆனால், தமிழ்நாடு மற்றும் பீகார் அரசுகளின் அதிரடி நடவடிக்கைக்குப் பின்னர் பயமெல்லாம் நீங்கிவிட்டது. அது போலி வீடியோ, நம்ப வேண்டாம் என்று நண்பர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். ஊரில் உள்ளவர்களிடமும் தகவல் தெரிவித்து, முழு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம்' என்று கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்களை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்க இருப்பதாக கண்காணிப்புக் குழு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை நிறைவு பெற்ற நிலையில் குழுவினர் பீகார் திரும்புகிறார்கள். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்ட பீகார் குழு, ஹோலி தினத்தை கொண்டாட சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைமை குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் .பாலு விளக்கம் தெரிவித்திருக்கிறார். வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடரந்து மேற்கொண்டு வருவது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மறைமலைநகர் பகுதியில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான புதிய வீடியோ வெளியானது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போலி வீடியோவை பரப்பிய விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படக்கூடும். இதுவரை தமிழர்கள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.கவும் பா.ஜ.கவும் பரஸ்பரம் குற்றம்சாட்டும் விவாதங்கள் இணையத்தில் உச்சத்தில் இருக்கின்றன.
இந்நிலையில் வீடியோ வெளியிட்டவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். வீடியோ வெளியிடுமாறு தூண்டிவிட்டவர்கள், அதை பரப்பியவர்கள் என அனைவர் மீதும் கட்சி வேறுபாடின்றி, மாநில வேறுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள், இணையவாசிகள்.