தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலியில் நேற்று பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுண், தச்சநல்லூர், வண்ணார்ப்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா, மத்திய பேருந்து நிலையம், கல்லட்டி, தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மழை காரணமாக கடும்குளிர் நிலவியது. சென்னையில் இன்று காலை முதலே ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அண்ணாசாலை, அடையார் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.