வட மாநில தொழிலாளர்கள் - நடப்பது என்ன?

வட மாநில தொழிலாளர்கள் - நடப்பது என்ன?

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான சமூக வலைத்தள வீடியோவும் அதற்கு பீகார் முதல்வர் கருத்து தெரிவித்த விஷயம்தான் நேற்று பரபரப்பான செய்தியாக இருந்தது. இது தமிழ்நாடு - பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களின் நல்லுறவையும் பாதிக்கும் என்கிற கவலையும் எழுந்திருக்கிறது.

சென்ற வாரம் ஹிந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியானது. இது பற்றி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறிந்தேன். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் தொடர்நது பேசி வருகிறோம். பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்களும் பிரச்னை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்றும் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த சில வட மாநில தொழிலாளர்களிடம் பேசினோம். சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்ததாகவும், இது போன்ற தவறான வீடியோ பல முறை பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்கள். இதனால் ஊரில் இருப்பவர்களைத்தான் சமாதானப்படுத்த முடியவில்லை என்றார்.

'நாங்கள் இங்கே பத்திரமாகத்தான் இருக்கிறோம். எந்த பிரச்னையுமில்லை. வேறந்த ஊரை விடவும் சென்னை எங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எங்கள் ஊரில் காலை ஒன்பது மணிக்கு மேல்தான் கடைகள் திறக்கப்படும். இங்கே காலை 5 மணிக்கே திறந்துவிடுகிறோம். காலை நேரங்களில் வடை, போண்டா, சமோசா வியாபாரம் பரபரப்பாக இருக்கிறது'

'ஆரம்பத்தில் காலையில் எழுந்து வேலை செய்வது சிரமமாக இருந்தது. பின்னர் பழகிவிட்டது. நிறைய பேர் எங்களை சந்தேகத்தோடு பார்ப்பார்கள். கையில் ஆதார் கார்டு வைத்திருந்தாலும் நம்பமாட்டார்கள். எங்களது டீக்கடைக்கொரு யூனிபார்ம் தயாராகி, எல்லோரும் அதை அணிந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தபிறகு எங்கள் மீதான மரியாதை கூடியிருக்கிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எங்களை நல்ல விதமாக நடத்துகிறார்கள். அக்கறையோடு எங்களைப் பற்றி விசாரிப்பார்கள்' என்றார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... அன்றும், இன்றும், என்றும் உண்மைதான்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com