ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்திப்பதற்காக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று ரஷ்யா சென்றடைந்துள்ளார். இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து செயல்படுத்திவரும் நிலையில், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதன்காரணமாக ரஷ்யா சர்வதேச அளவில் கடும் நெருக்கடிகளை சந்தித்துவருகிறது.
அதேபோல் அணு ஆயுதங்கள் துறையில் அமெரிக்க உட்பட முன்னேறிய நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவரும் வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் உணவு பஞ்சம், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களுக்கு சீனா, ரஷ்யா போன்ற முன்னேறிய மற்றும் வடகொரியா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் நாடுகளுடன் நட்புணர்வை மேம்படுத்திவருகிறது வடகொரியா.
இந்நிலையில், ரஷ்யா அதிபர் புதினை நேரில் சந்திப்பதற்காக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தலைநகர் பியோங்யாங்கில் இருந்து தனது தனிப்பட்ட ரயில் மூலம் முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் புறப்பட்ட அவர், இன்று ரஷ்யா சென்றடைந்தார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த பயணம் முழுமையான அரசு பயணமாக இருக்கும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் உன் தங்கியுள்ள கசான் பகுதியில் இன்று நடைபெறும் கிழக்கு பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் வருகை தர வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் இதில் கிம் ஜாங் உன் பங்கேற்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
தொடர்ந்து, இரு நாட்டு உயரதிகாரிகளுக்கும் இடையே உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், தேவைப்பட்டால் இருநாட்டு அதிபர்களும் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு விலாடிவோஸ்டாக் பகுதியில் நடைபெறு என கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டும் இதே பகுதியில் தான் கிம் ஜாங் உன் மற்றும் புதினின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமெரிக்காவுடன் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தம் தோல்வியை சந்தித்ததை அடுத்து புதின் மற்றும் கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது நடைபெறும் இருநாட்டு அதிபர்களின் சந்திப்பில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்படவுள்ளது? வடகொரியாவுக்கு உணவு மற்றும் பொருளாதார நடவடிக்கையில் ரஷ்யா உதவ முன்வருமா? அல்லது ரஷ்யா உக்ரைன் இடையில் போர் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் வடகொரியாவிடம் இருந்து அதிபயங்கரமான ஆயுதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என பல கேள்விகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரஷ்யா அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள், ''ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் “சுறுசுறுப்பாக முன்னேறி வருவதாக” புதிய தகவல் கிடைத்துள்ளதாக" தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதேநேரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா தரப்பில் ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு 80 கோடி டாலர் இராணுவ உதவித் தொகுப்பை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதில் பேரபாயம் வாய்ந்த கொத்துக்குண்டு ஆயுதங்களும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. பேரபாயத்தை ஏற்படுத்தும் இந்த கொத்துக்குண்டுகள் (cluster Bomb) உக்ரைன் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாகதான் ரஷ்யா வடகொரியா அதிபர்களின் சந்திப்பு அமெரிக்காவுக்கு மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.