பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை: மு.க.ஸ்டாலின் காட்டம்!

பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை: மு.க.ஸ்டாலின் காட்டம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதுமான தனது நடை பயணத்தை ராமேஸ்வரத்தில் நேற்று தொடங்கினார். இந்த நடை பயணத்தைத் தொடங்கிவைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக சாடிப் பேசினார். இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைப் பார்க்கும்போது நான் இளமையாக உணர்கிறேன். எனக்கு வயசு 70. ஆனால், இங்கே 20 மாதிரி நிற்கிறேன். 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறையை நடத்தியது உதயநிதியின் சாதனை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுகவை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் திமுக நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இளைஞரணி நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு, அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். இளைஞரணி செயலாளராக உதயநிதி பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறார். கட்சி, ஆட்சி இரண்டிலும் சிறப்பாகப் பணியாற்றி ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தருகிறார். திமுக இளைஞரணி தீர்மானங்களைப் பார்க்கும்போது மிகுந்த நிம்மதி அடைகிறேன். திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லவே, ‘இந்தியா’ கூட்டணி. ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டால், சிலர் பதறுகிறார்கள். எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர். அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைக்க நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வந்தார். பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றவைக்கும், தற்போது மணிப்பூரில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கும் மன்னிப்புக் கேட்கும் பாவ யாத்திரை.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித் ஷா பேசி உள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்களே, இது குறித்து பிரதமரிடம் அமித் ஷா கேட்பாரா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடியப்போகிறது. மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது. இந்தியாவை காப்பாற்ற I.N.D.I.Aவுக்கு வாக்களியுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் கூட்டத்தில் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com