

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் கூட்டணிகள் குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சராகவும் மூத்த தலைவராகவும் இருந்து தற்போது அக்கட்சியில் இருந்து விலகி இருக்கும் ஓ பன்னீர்செல்வம் கூட்டணி முடிவு குறித்து விரைவில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். கடந்த சில தினங்களாக அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி தொடர்பான நகர்வுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று தேனி பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். தொண்டர்களின் ஆவேசம் துண்டு சீட்டு பிரசுரங்கள் இடையே நடந்து முடிந்த ஆலோசனைக்கு பின் தங்கள் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இன்னும் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக முடிவெடுக்க வில்லை. இந்த நிலையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி- அதிமுக கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும் திமுகவுடன் இணையப் போவதில்லை என்றும் தவெகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் வதந்திகள் பரப்பி வருகின்றனர். நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை" எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.மேலும் தனிக்கட்சி துவங்கி தனித்துப் போட்டியிடும் முடிவையும் தான் இன்னும் எடுக்கவில்லை என்றும் அதிமுகவை ஒன்றிணைக்க சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
இபிஎஸ் இடம் டிடிவி தினகரன் பரிந்துரை செய்தால் அதிமுகவில் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பது மீண்டும் அதிமுகவில் இணைவதைத்தான் அவரது உள்மனம் விரும்புகிறது என்பதை காட்டுகிறது.
டிடிவி தினகரன் நட்பு ரீதியில் அழைத்ததாகவும் திருநெல்வேலியில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் "ஓபிஎஸ் போன்ற நல்லவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் இணைவார்கள்". என்று சொல்லியிருப்பது அவர் கருத்து மட்டுமே. டிடிவி தினகரன் மற்றும் நயினார் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் இதுவரை பாஜகவிடமிருந்தோ அதிமுகவிடமிருந்தோ கூட்டணி தொடர்பாக அணுகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் தான் போட்டியிட்ட போது தனது பெயரிலேயே பல வேட்பாளர்களை நிறுத்தி சூழ்ச்சியால் என்னை தோல்வியடைய செய்தனர். அதிமுகவின் தொண்டர்கள் யார் பக்கம் என்பதைக் காட்டவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்தும் கூட்டணி குறித்தும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்ததன் மூலம் ஓபிஎஸ்ன் தேர்தல் முடிவு இன்னும் இறுதி நிலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் மீண்டும் இணைவதற்குத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அதிமுகவில் மீண்டும் இணைய நான் தயாராகவே உள்ளேன். ஆனால், எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி. தினகரனும் இதற்குத் தயாராக இருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதன் மூலம் கட்சியை ஒன்றிணைக்கத் தான் விரும்புவதை அவர் வெளிப்படுத்தினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ன் கோரிக்கையை அடியோடு நிராகரித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
"ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபரின் முடிவல்ல; அதிமுக பொதுக்குழு கூடி ஒருமனதாக எடுத்த முடிவு. எனவே, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார்.