தி.மு.க வுக்காக எதிர்க்கவில்லை! மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் எதிர்க்கிறோம் - திருமாவளவன் விளக்கம்!

தி.மு.க வுக்காக எதிர்க்கவில்லை! மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் எதிர்க்கிறோம் - திருமாவளவன் விளக்கம்!
Published on

ஆளுநர் பேச்சும், வெளிநடப்பு செய்ததை ஆளுங்கட்சியினரே மறக்க நினைத்தாலும் கூட்டணிக்கட்சியினர் விடுவதாக இல்லை. தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாக வாசிக்காமல், ஆளுநர் சிலவற்றை தவிர்த்துவிட்டு வாசித்ததோடு, அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆளுநரை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருமாவளவன் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ஆளுநரை ஏன் எதிர்க்க வேண்டியிருக்கிறது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். 'ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள். தமிழ்நாடு, பா.ஜ.க அரசியலுக்கு எதிரான இருக்கத்தைக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். அவர்களின் அரசியல் இங்கே ஈடுபடாத அளவுக்கு திராவிட அரசியல் ஆளுமை செலுத்துகிறது’

‘தி.மு.க எதிர்ப்பாளர்கள், திராவிட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதாக நம்மை விமர்சிக்கிறார்கள். நம்மைப் பற்றி புரிந்து கொள்ளாமல் அறியாமையால் விமர்சிக்கிறவர்களும் உண்டு, காழ்ப்புணர்ச்சியால் விமர்சிக்கிறவர்களும் உண்டு. நாங்கள் தி.மு.க-வுக்காக ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்க்கவில்லை. இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் எதிர்க்கிறோம்'

'இன்றைக்கு கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு முஸ்லீமை ஆளுநராக இருக்க வைத்து, நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறார்கள். ஆளுநர் இல்லாமலேயே நாங்கள் சட்டசபை நடத்துவோம் என்கிற அளவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணிந்து முடிவெடுத்திருக்கிறது’

‘மேற்கு வங்கத்து மம்தா பானர்ஜியும் ஆளுநர் இல்லாமல் சட்டசபையை நடத்திக்காட்டியிருக்கிறார். ஜெயலலிதாவும், சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது, அவர் இல்லாமலே ஒரு கூட்டத்தொடரை நடத்திக் காட்டியிருக்கிறார். ஆகவே முதல்வர் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி இல்லாமலேயே அடுத்த கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'

ஆளுநருக்கு எதிராக முதலில் போராட்டம் அறிவித்தது, விடுதலைச் சிறுத்தைகள். ஆளுநரை எதற்காக எதிர்க்கிறோம் என்பதையும் தொடர்ந்து தெளிவாக விளக்கி வருகிறது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான விஷயங்களில் கேரளா, மேற்கு வங்கத்து முதல்வர்கள் போல் நம்முடைய முதல்வரும் கடுமையாக நடந்த கொள்ள வேண்டும் என்பதை கோரிக்கையாக திருமாவளவன் முன்வைத்திருக்கிறார். இதுவும் தோழமை சுட்டல்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com