சென்னையில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவிஎண்களை அறிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மூலமாகவும் உதவியை நாடலாம் என மாநகராட்சிநிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதார ஏரிகளான புழல், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விடிய விடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சூளைமேடு பகுதிகளில் தண்னீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வில்லிவாக்கத்திலும் மிக கனமழை பெய்தது. இங்கு மட்டும் ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவானது. இந் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.