ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடையணிந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள வீட்டில் ராகுல் காந்தி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com