ஊட்டி பள்ளியில் 34 பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு. பெற்றோர் முற்றுகை!

ஊட்டி பள்ளியில் 34 பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு. பெற்றோர் முற்றுகை!

Published on

ட்டி பள்ளியில் பிளஸ் டூ கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதாக கூறப்பட்ட சம்பவத்தில் 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்தான தகவல்கள் நேற்றே http://www.kalkionline.com ல் வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சிதான் இது.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி மூன்றாம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன் தினம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஊட்டி சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் உதவியுடன் கணித தேர்வு எழுதியதாக கூறப்படும்  34 மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 34 மாணவர்களும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில் “இந்த தேர்வில் இரண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உதவினார்கள். அவர்களை மட்டும் இந்த விஷயத்தில் கொண்டு வராமல் எல்லா மாணவர்களையும் ஒட்டு மொத்தமாக தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். மற்றொரு மாணவர் ஜேஇஇ தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது இந்த அறிவிப்பினால் அவர்கள் உள்பட மற்றும் 32 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வருந்தினர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி மற்றும் கோவை மாவட்ட முதன்மை அதிகாரி பூபதி ஆகியோர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நேற்று சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு நேரில் சென்று +2  தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பணியிடை  நீக்கம் செய்யப்பட்ட ஐந்து ஆசிரியர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர் ஆகியோரோடு நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து முனுசாமி அவர்கள் கூறுகையில் “தேர்வு எழுதிய 34 மாணவர்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தற்போதுள்ள தலைமை ஆசிரியர் பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னையில் உள்ள தேர்வு துறைக்கு கொண்டு செல்லப்படும். சர்ச்சைக்குரிய இரண்டு மாணவர்களைத் தவிர மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும் எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறி இருக்கிறார்.

தாங்கள் எழுதிய கணிதத் தேர்வில் அரசு தரும் மதிப்பெண்களால்தான் தங்களின் எதிர்காலம் என்று அரசின் நல்ல முடிவுக்காக காத்துள்ளனர் 32 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும்.

logo
Kalki Online
kalkionline.com