இனி தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் இ-சேவை மையம் தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 14க்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள், அரசு கேபிள் டி.வி நிறுவனம், கிராமப்புற தொழில் முனைவோர், மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலமாக இ-சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த இடங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மக்கள் வெகு நேரம் காத்திருந்து அவர்களுக்கான பணிகளை முடித்துக் கொண்டு செல்லும்படி ஆகிறது.
இதற்கு தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர்களையும் படித்த இளைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அனைத்து விதமான இணைய சேவைகளும் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக, பொது மக்களும் இ-சேவை மையம் தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க பிரத்தியேகமாக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இதில் இணையம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். இதற்கு நீங்கள் விண்ணப்பம் செய்ய பிரிண்டர், ஸ்கேனர், கம்ப்யூட்டர், கைரேகை சாதனம், இணையவசதி போன்ற சில வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் இதை இயக்குவதற்கான அனுபவமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
www.tnesevai.tn.gov.in மற்றும் www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 8 மணிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தை நீங்கள் கிராம பகுதிகளில் தொடங்கு வதற்கு 3000 ரூபாயும், இதுவே நகரப் பகுதிகளில் தொடங்க விரும்பினால் 6000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்த பிறகு, உங்களுக்கான பிரத்யேக பயனர் எண் மற்றும் அதற்கான கடவுச்சொல், ஆகியவை நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு இ-சேவை மையத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.