

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்கள் பெறுவது வரை அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படையான, மிகவும் அவசியமான ஒன்றானதாக உள்ளது. இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டையை நேரில் சென்று திருத்துவதற்கான கால விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இவற்றை தீர்ப்பதற்கு ஆதார ஆணையம் அவ்வப்பொழுது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
புதிய ஆதார் செயலி ஏற்கனவே உள்ள mAadhaar செயலியைப் போலவே தோன்றினாலும் மொபைல் எண் மற்றும் முகவரியை புதுப்பிக்கும் திறன் போன்ற சில முக்கிய வேறுபாடுகள் இதில் உள்ளன. ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரி விவரங்களை மாற்றுவதற்கு புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக e-Aadhaar App எனப்படும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கும். இந்த செயலியில் அடுத்தடுத்து புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம்.
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் முகவரி விவரங்களை செயலி வாயிலாக நாமே சுயமாக திருத்தம் செய்து கொள்ள முடியும் வகையில் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதாரில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள எண்ணுக்கு ஓ.டி.பி. பெற்று, புதிய எண் பதிவு செய்து, முக அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி மொபைல் எண்ணை மாற்றம் செய்ய கோரலாம். அதேபோல் உரிய ஆவணங்களை இணைத்து முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கு 75 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆதார் விவரங்கள் கேட்கப்படும் இடங்களில் இனி நகலாக கொடுக்க விருப்பம் இல்லையென்றால் ஆப் வழியாகவே ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் நம் ஆதார் விவரங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
ஆதார் செயலியை பயன்படுத்தி முகவரியை புதுப்பிப்பதையும் இது எளிதாக்கியுள்ளது. இதை இரண்டு முறைகளை பயன்படுத்தி செய்யலாம். முதலாவது ஆதார் அட்டை வைத்திருப்பவரின் பெயரில் உள்ள செல்லுபடியாகும் முகவரிச் சான்றை பயன்படுத்துவதை உள்ளடக்கியது. ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் வாக்காளர் அடையாள அட்டை, மின்சார பில், எரிவாயு இணைப்பு பில், தண்ணீர் பில், இந்திய பாஸ்போர்ட், போஸ்ட்- பெய்டு மொபைல் பில், வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் பல அடங்கும்.
மாற்றாக, குடிமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினரின் ஆதாரைப் பயன்படுத்தி ஆதார் தரவுத்தளத்தில் தங்கள் முகவரியை புதுப்பிக்கலாம். குடும்ப உறுப்பினரின் ஆதாரை பயன்படுத்தும் பொழுது உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிட்டு முக அங்கீகாரத்தை மேற்கொண்டு பணம் செலுத்த வேண்டும். கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒரு குறுஞ்செய்தி மற்றும் அறிவிப்பு வரும். அதை ஆதார் செயலியில் அங்கீகரிக்க வேண்டும். இப்படி குடும்ப உறுப்பினரின் ஆதாரை பயன்படுத்தி முகவரியை புதுப்பிக்க முடியும்.
இதுவரை மொபைல் எண் மற்றும் முகவரி மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று, வரிசையில் நின்று, பயோமெட்ரிக் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இனி இந்த சிரமம் இல்லை. ஆதார் சேவைகளை எளிமைப்படுத்தும் இந்த முயற்சி, டிஜிட்டல் இந்தியா நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.