திருப்பதியில் இனி பக்தர்களுக்கு ஆர்கானிக் லட்டு!

திருப்பதியில் இனி பக்தர்களுக்கு ஆர்கானிக் லட்டு!
Published on

திருமலை திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலக பிரசித்தம் பெற்றதாகும். திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில், "கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து இருக்கிறோம். இது தவிர, இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அந்த பொருட்களைப் பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்யவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கான விலை பற்றி ஆலோசனை நடத்தி இருக்கிறோம். திருப்பதியில் உள்ள கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றை 16 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும், ‘திருப்பதி கங்கையம்மன் கோயிலுக்கு பன்னிரண்டு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவும், டெல்லியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் நான்கு கோடியே 13 லட்ச ரூபாய் செலவில் ஆடிட்டோரியம் கட்டவும், டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் மே மாதம் மூன்றாம் தேதி துவங்கி 16ம் தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோத்ஸவம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ’திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்கவும், அதற்குத் தேவையான நிதியை விடுவிக்கவும் இந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com