ராயல் என்பீல்டு (Royal enfield) பைக்குகள் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராயல் என்பீல்டு நிறுவனம் மே மாதத்தில் ஃபிளிப்கார்ட் தளத்தில் பைக்குகளைப் பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ஜிஎஸ்டி வரிகள் நடைமுறைக்கு வரும் அதே நாளில், ராயல் என்பீல்டு (Royal enfield) பைக்குகளின் விற்பனையும் தொடங்குகிறது. 350சிசி-க்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு, இழப்பீட்டு செஸ் நீக்கப்பட்டதால் அவற்றின் விலை குறைந்துள்ளது. தற்போது, ராயல் என்பீல்டு அதன் 350சிசி ரக பைக்குகளை மட்டும் ஃபிளிப்கார்ட்டில் பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கிளாசிக் 350, ஹண்டர் 350, புல்லட் 350, மீட்டியோர் 350 மற்றும் கோன் கிளாசிக் ஆகிய மாடல்கள் அடங்கும். ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு, ஹண்டர் மாடல் ₹1,37,640 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையுடன் இந்த வரிசையில் மிகவும் குறைந்த விலை கொண்ட மாடலாக உள்ளது. கோன் கிளாசிக் மாடல் ₹2,20,716 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையுடன் மிகவும் அதிக விலை கொண்ட மாடலாக உள்ளது.
ஃபிளிப்கார்ட்டுடனான இந்த கூட்டணி குறித்து பேசிய ராயல் என்பீல்டின் சிஇஓ, பி.கோவிந்தராஜன், “வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான பைக்குகளை எளிதாகவும், வசதியாகவும் ஆன்லைனில் ஆராய்ந்து வாங்குவதற்கு ஃபிளிப்கார்ட் (Royal enfield) ஒரு சிறந்த தளமாக அமைகிறது” என்று தெரிவித்தார்.
தொடக்கத்தில், பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகள் ஃபிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும். பைக்குகளின் டெலிவரி மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை அந்தந்த நகரங்களில் உள்ள ராயல் என்பீடின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மேற்கொள்வார்கள்.
இந்த பைக்குகள் 349சிசி ஏர்/ஆயில் கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன. இது 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இதில் உள்ள 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலம் பவர் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. 350சிசி-க்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகள் இன்னும் ஃபிளிப்கார்ட்டில் பட்டியலிடப்படவில்லை. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் இந்த பைக்குகளின் விலை அதிகரிக்கவுள்ளது.