உலகம் முழுவதும் அதிக மக்கள் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பல மாற்றங்கள் அதன் பயனர்களை சோர்வடையச் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போதுதான் ஒரு நல்ல செய்தியை எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளமானது விரைவில் கண்டென்ட் கிரியேட்டர் களும் பணம் சம்பாதிக்கும் படியான புதிய திட்டத்தை அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். குறிப்பாக இதை எலான் மஸ்கே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இந்த அறிவிப்பு கண்டென்ட் கிரியேட்டர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதாவது ட்விட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் ட்வீட்டுக்களில் விளம்பரங்களை ஒளிபரப்புச் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதற்கு ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே ஐந்து மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் பணம் சம்பாதிக்க கிரியேட்டர்கள் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரராக இருக்க வேண்டும். வெரிஃபைட் செய்யப்பட்ட கிரியேட்டர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் பல்வேறு விதமான மாற்றங்களை செய்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க தொடர்ச்சியாக பல மாற்றங்களையும் செய்து வருகிறார். கூடுதலாக பல வசதிகளையும் twitter தளத்தில் இணைத்து, பயனர்களை தன் வசமாக இழுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ட்விட்டர் தளத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் விரைவில் நீக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் தங்களுடைய டிவிட்டர் அக்கவுண்ட்டை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஏனென்றால், தற்போது ட்விட்டர் தளத்தை பயன்படுத்தவில்லை என்றாலும், கடந்த காலத்தில் பதிவிட்ட ட்வீட்டுகள் மொத்தமாகப் போய்விடும் என்பதால், பெரும்பாலானவர்கள் தன் கணக்கை மீட்டெடுக்க மீண்டும் ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.
இந்த முடிவால் அதிருப்தியடைந்த பயனர் ஒருவர் "பயன்படுத்தாத அக்கவுண்ட் நீக்கப்படும் என்ற அறிவிப்பு twitter நிறுவனத்தின் தவறான முடிவாக மாறக்கூடும். பலரது பழைய ட்வீட்டுகள் அழிக்கப்படுவதால், இந்த முடிவை செயல்படுத்துவதற்கு முன்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என எலான் மஸ்குக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதைப் பார்த்த எலான் மஸ்க், பழைய ட்வீட்டுகள் முழுமையாக அழிக்காமல், Archived செய்யப்படும் என அவருக்கு பதிலளித்தார்.
இந்த முடிவை சிலர் வரவேற்றனர் என்றாலும், நீங்கள் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டை பாதுகாக்க விரும்பினால், தொடர்ந்து உங்கள் கணக்கை பயன் படுத்துவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும், 30 நாட்களுக்கு ஒரு முறையாவது Login செய்ய மறக்க வேண்டாம். இப்படி செய்தாலே உங்கள் ட்விட்டர் கணக்கு inactive கணக்காக மாறாது.