
தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள முக்கிய ரெயில் முனையம் சென்ட்ரல் ரெயில் நிலையமாகும். வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரெயில்களின் நுழைவாயிலாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்கி வருகிறது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரெயில் நிலையங்களில் ஒன்றாகும், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும் உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் என இரண்டும் இயக்கப்படுகிறது. அன்றாட தேவைக்காகவும், வேலை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும், மாநிலங்களுக்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காகவும் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தினம்தோறும் பல மாநிலங்களுக்கும் இங்கிருந்து ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
அதில் பலர் ரெயிலுக்கு தாமதமாவதால் அங்கேயே படுத்துத் தூங்குவதால் பிற பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக புகார்கள் உள்ளது.
சமீபகாலமாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவு சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வருவதுடன் அங்கேயே அதிகநேரம் தங்கவும் செய்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். உறவினர்களை வெளியூர் ரெயில்களில் வழியனுப்ப வரும் நபர்கள் கண்டிப்பாக நடைமேடை டிக்கெட்(Platform ticket) எடுத்து வர வேண்டியது கட்டாயம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இது தவிர ரெயில் ஏற வந்தவர்களை வழி அனுப்ப வந்தவர்கள் நீண்ட நேரம் ரெயில் நிலையத்திற்குள் இருப்பது,அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் மக்கள் இரவு நேரங்களில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று தூங்கிவிடுவது போன்ற செயல்களால் கடைசி நேரத்தில் பயணிகள் வேகமாக தங்கள் ரெயிலை பிடிக்கச் செல்வதில் காலதாமதமும், இடையூறும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு ரெயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடைமேடை டிக்கெட்டை எடுத்து விட்டு நீண்ட நேரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காத்திருந்தாலும், உறங்கினாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும். இனிமேல் நடைமேடை டிக்கெட் எடுத்திருந்தாலும் நீண்ட நேரம் ரெயில் நிலையத்திற்குள் இருந்தால், உறங்கினால் அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.