நிர்வாணம் வேறு.. ஆபாசம் வேறு.. கேரள உயர் நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு!

நிர்வாணம் வேறு.. ஆபாசம் வேறு.. கேரள உயர் நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு!

கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவர் “Body and Politics” என்ற பெயரில் கடந்த 2020ம் ஆண்டு வெளியிட்ட அரை நிர்வாண வீடியோ தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்துள்ள கேரள உயர் நீதிமன்றம் நிர்வாணம் வேறு… ஆபாசம் வேறு என தீர்ப்பு வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்பவர் கடந்த 2020ம் ஆண்டு தனது மேலாடை இல்லாத தனது அரை நிர்வாண உடலில், தனது மகள் மற்றும் மகள் ஓவியம் வரைந்த வீடியோவை “Body and Politics” எனும் பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ரெஹானா பாத்திமா இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் செயல் தூண்டும் விதமாக ரெஹானா பாத்திமாவின் செயல்பாடு உள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைச் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்துள்ள கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி கசர் எடபாகத்தின் உத்தரவில் (Justice Kauser Edappagath), “ஒரு தாயின் மேல் உடலில் சொந்த குழந்தையால் கலை படைப்பிற்காக வண்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது. கலையை வெளிப்படுத்தும் இந்த செயலில், குழந்தையை பாலியல் செயலை தூண்ட பயன்படுத்துகின்றனர் என கூறுவது இரக்கமற்றது என்றும், ரெஹானா பாத்திமா வெளியிட்ட அந்த வீடியோவில் பாலியல் சார்ந்த எந்த விசயங்களும் இல்லை என்றும் அவ்வாறு குற்றம்சாட்டுவது இரக்கமற்ற செயல் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், ஆணாதிக்க சிந்தனையின் காரணமாக பெண்களின் உடலை ஆபாசமாக சித்தரிப்பதும் தவறு என்றும் ஆண்களின் மேலாடை இல்லாத உடலை எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் பெண்களின் மேலாடை இல்லாத உடலையும் கருதவேண்டும் என கூறி நீதிபதி, பெண்களின் அரை நிர்வாண உடல் பாலியலுடன் தொடர்புப்படுத்தப்படுவது என்பது சூழ்நிலையை பொருத்தே அது ஆபாசமா அல்லது இயல்பானதா என கருத முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் கேரளாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்ட முலை வரி சட்டத்தை சுட்டிக்காட்டியும் அதற்கு எதிராக நங்கேலி என்ற பெண் தனது முலைகளை அறுத்து எதிர்ப்பு தெரிவித்த உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, கோயில்களில் உள்ள பெண் சிலைகள் ஆபாசமான கண்ணோட்டத்திற்கு பதிலாக கலையாக பார்க்கப்படுவதுபோல் நிர்வாணத்திற்கும் ஆபாசத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்ளவேண்டும். இதன்காரணமாக ரெஹானா பாத்திமாவை அனைத்து வழக்கில் இருந்து விடுவிப்பதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com