தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் எம்.ஆர்.பி (MRP) செவிலியர்கள் சென்னையில் முன்னெடுத்துள்ள போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். அங்கேயும் அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால், மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.ஏற்கனவே அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், செவிலியர்கள் மண்டபத்திலிருந்து வெளியேறி நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். நேற்று 4-வது நாளாக அங்கேயே அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்தச் சூழலில், போராட்டக் குழுவினர் இன்று (திங்கட்கிழமை) கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையில் சுமுக முடிவு எட்டப்பட்டால், 4 நாட்களாக நீடித்து வரும் செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
750 பேருக்கு புதிய பணியிடங்களை உறுவாக்கி தரப்படும். பொங்கலுக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும்"என உறுதி அளித்தார்.