மீண்டும் சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் OceanGate நிறுவனம்.

மீண்டும் சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் OceanGate நிறுவனம்.
Published on

டைட்டானிக் கப்பலை பார்வையிட மீண்டும் சுற்றுலா அழைத்துச் செல்வதாக அறிவித்த ஓசியன் கேட் நிறுவனத்தின் விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

சிதைந்து போன டைட்டானிக் கப்பலைக் காண ஜூன் மாதம் 18ஆம் தேதி ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய அன்றைய தினமே வெடித்து சிதறியது ஓசியன் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல். இந்த கோர விபத்தில் அதில் பயணித்த அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் அடங்குவார். நீர்மூழ்கி கப்பலில் பயணித்த அனைவருமே கோடீஸ்வரர்கள். இதையடுத்து இனி ஆழ்கடல் சுற்றுலா மேற்கொள்ளப் போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டைட்டானிக் கப்பலைப் பார்க்க இரண்டு கோடி ரூபாய்க்கு சுற்றுலா டிக்கெட் விற்பதாக இணையதளத்தில் அந்நிறுவனம் விளம்பரப் படுத்தியுள்ளது. 

அந்த இணையதளத்தில் "நீங்கள் டைவ் செய்வது ஒரு சிறப்பான மற்றும் தனித்துவமான பயண அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாமல், டைட்டானிக் கப்பலின் சிதைவு மற்றும் ஆழ்கடல் சூழ்நிலையை அறிய விஞ்ஞானிகளும் உதவுவார்கள். ஒவ்வொரு டைவுக்கும் ஒரு அறிவியல் நோக்கம் உள்ளது" என அந்த இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தில் ஒரு பைலட் ஒரு உள்ளடக்க நிபுணர் மற்றும் 3 பயணிகள் பயணிக்கலாம். ஒரு பயணத்திற்கு சுமார் 250,000 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு முன்பு நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் சப் பைலட் பதவிக்கான விளம்பரத்திற்கு அதிக நபர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்த பிறகு, புதிய பதவிக்கான வேலை விளம்பரம், முற்றிலுமாக நிறுவனம் தரப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் சேதமடைந்த பாகங்களில் இருக்கும் மனித மிச்சங்கள் என்று கூறி, சில பாகங்களை அமெரிக்க கடலோரக் காவல் படையினர், கடந்த வியாழனன்று மீட்டு, அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தனர். இந்த பாகங்களை ஆய்வு செய்வது மூலம், டைட்டன் பேரழிவுக்கு வழிவகுத்த காரணிகள் பற்றி புரிந்து கொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆய்வு, இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதையும் உறுதி செய்ய உதவும் என அமெரிக்க கடலோரக் காவல் படையின் தலைமைக் கேப்டன் கூறினார். 

நீர் மூழ்கியில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் சுற்றுலா அழைத்துச் செல்வதாக வெளியிட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com