’மத்தியில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை‘ ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!

’மத்தியில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை‘ ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!
Published on

டுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல். இந்த லோக்சபா தேர்தலை ஒட்டி பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அந்த வகையில் இன்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோரை மும்பையில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா சென்ற நிதிஷ்குமார், அம்மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது லோக்சபா தேர்தலுக்காக மூன்றாவது அணி குறித்தான பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டில்லி சென்ற நவீன் பட்நாயக், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் பட்நாயக், ” இன்று பிரதமரை சந்தித்துப் பேசினேன். ஒடிசாவின் புரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவும், தலைநகர் புவனேஸ்வரத்தில் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க தலைநகரை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். நான் சொன்ன கோரிக்கைகளை பிரதமரும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருக்கிறார். மேற்கொண்டு டில்லியில் வேறு எந்தத் தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை” என்று கூறினார்.

அதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நிதிஷ்குமாருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்னைப் பொறுத்தவரை மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜு ஜனதா தளம் கூட்டணி வைக்காது. தனித்தே போட்டியிடும்” என்று கூறி உள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், அதன் மூலம் மூன்றாவது அணி அமைக்க முன்னெடுக்கும் முயற்சிக்கு நவீன் பட்நாயக் எந்த உத்தரவாதமும் தரவில்லை என தலைநகர் டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com