கவனக்குறைவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததுதான் ஒடிசாவில் பெரிய அளவில் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது. தவறு செய்தவர்கள் மீது உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும் என்று முன்னாள் முதல்வரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பாட்னாவில் ஓய்வெடுத்து வரும் லாலு, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. அன்றாட அரசியல் பற்றி கருத்து தெரிவிப்பதுமில்லை. ஆனால், ஓடிசா ரயில் விபத்து பற்றி கருத்து தெரிவித்திருப்பதாக வந்துள்ள செய்திகள் இணையத்தில் பேசு பொருளாகியிருக்கின்றன. குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை குறிப்பிட்டு, லாலு இருந்தால் ரயில்வேத்துறை இதை விட முன்னேறியிருக்கும். விபத்துகளும் நேராமல் இருந்திருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.
2004ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் ரயில்வேத்துறை அமைச்சராக லாலு பணியாற்றியபோது, மிகப்பிரபலமான ரயில்வே அமைச்சராக இருந்தார். முன்னதாக மூன்று முறை பீகார் முதல்வராக இருந்தாலும் ரயில்வேத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றியது இன்று வரை நினைவுகூரப்படுகிறது.
2004 முதல் 2009 வரை இந்திய ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு லாலு காரணமாக இருந்தார். குறிப்பாக பயணிகளுக்கான ரயில்வே கட்டணம் முதல்முறையாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்திய ரயில்வேயில் கட்டணக் குறைப்பை லாலு அதை துணிந்து செய்திருந்தார். பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை குறைத்துவிட்டு சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவரது அதிரடி நடவடிக்கைகளால் ரயில்வேத்துறை 3000 கோடி ரூபாய் லாபம் பெற்றதாக சொல்லப்பட்டது. இதையெடுத்து வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ மாணவர்களுக்கு மத்தியில் லாலு உரையாற்றியதாகவும் செய்திகள் வெளியாகின.
2009ல் வெளியான சி.ஏ.ஜி ரிப்போர்ட், ரயில்வேத்துறையின் லாப, நஷ்டங்களில் பெரும் தவறு இருப்பதாகவும். ரயில்வேத்துறை இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை என்றும் தெரிவித்தது. கூடவே ரயில்வே டெண்டர்களில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாகவும் அதில் லாலுவின் குடும்பம் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ரயில்வே டெண்டர்கள், ரயில்வேயில் ஆள் நியனம் போன்றவற்றில் கிடைத்த லஞ்ச பணத்தை ஷெல் நிறுவனங்களில் லாலுவின் குடும்பத்தினர் முதலீடு செய்தாகவும் செய்திகள் உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், ரயில்வேத்துறையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டார்கள் என்று லாலு செய்துள்ள அதே விமர்சனத்தை 2009ல் மம்தா
பானர்ஜி செய்திருந்தார். லாலூவுக்கு பின்னர் ரயில்வே அமைச்சராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, துறை சார்ந்த விசாரணைகளையும் முடுக்கிவிட்டார். ரயில்வே அமைச்சராக லாலு செய்த சாதனைகளை மறுத்து, அப்போது குளறுபடிகள், ஊழல்கள் அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் மம்தா பானர்ஜி.