ஒடிசா ரயில் விபத்து - பிரதமரிடமிருந்து விளக்க அறிக்கை வேண்டும் - கார்கே!

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே

நூற்றாண்டின் சோகமாக வர்ணிக்கப்படும் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 151 பேர்களின் அடையாளம் மட்டுமே தெரிந்திருப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கார்கே, விபத்து குறித்து கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.

போக்குவரத்துத் துறையில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும், சாமானிய இந்தியனின் உயிர்நாடியாக விளங்கும் இந்திய ரயில்வேத்துறை கைகொடுக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ள கார்கே, விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ள கார்கே, இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்

ரயில்வேத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து கேள்வியெழுப்பியவர், இந்திய ரயில்வேத்துறையில் 9 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் 3 லட்சம் காலிப் பணி இடங்களை நிரப்பாதது ஏன்? 18 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்? 3.8 லட்சம் ஊழியர்களை இன்னமும் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது ஏன்? ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? பணிநேரத்தை தாண்டி அதிக நேரம் பணியில் இருக்கவேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்துவது ஏன்? என்று ஊழியர் நலன் சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, தென்மேற்கு மண்டல அதிகாரி சிக்னல் கட்டமைப்பு கோளாறு தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் ஏன்? இந்திய தலைமை கணக்கு அதிகாரி சுட்டிக் காட்டிய பின்னும் தண்டவாளங்களை சீரமைக்காதது ஏன்? ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்புவது ஏன்? ஒடிசா ரயில் விபத்துக்கு மூல காரணம் கண்டுபிடித்துவிட்டோம் என கூறிய பின் சிபிஐ விசாரணை மேற்கொள்வது ஏன்? என்று கேட்டிருக்கிறார்.

விபத்து நடந்தபோது முதல் அறிக்கை விடுத்த கார்கே, இது அரசியல் பேச வேண்டிய நேரமில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ரயில்கள் அதே பாதையில் செல்ல ஆரம்பித்த பின்னர் சம்பவம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com