ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 82 உடல்களை இன்னும் அடையாளம் காணமுடியவில்லை என்று ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. அடையாளம் காணுவதில் உதவுமாறு மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறது. உடல்கள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால் அடையாளம் காணும் பணியை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சடலங்களை புவனேஸ்வர், பாலோசோர் என இரு இடங்களில் பிரித்து குளிரூட்டப்பட்ட கண்டெயினரில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்னும் 50 சடலங்களை அடையாளம் காணவேண்டியிருக்கிறது. முகம் தெரியாமல் சிதைந்து கிடக்கும் 50க்கும் மேற்பட்ட உடல்களை அடையாளம் காணுவது சிரமமாக இருப்பதாக ஒடிசா மாநில உள்துறைச் செயலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரு சில உடல்களை ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் உரிமை கொண்டாடுவதால் அடையாளத்தை கண்டறிவது பெரும் சிக்கலாக இருக்கிறது. மத்திய அரசின் சார்பாகவும், மாநில அரசுகளின் சார்பாகவும் லட்சக்கணக்கான இழப்பீட்டு தொகை தரப்படுவதால் அடையாளம் காணாத உடலை சொந்தம் கொண்டாடுவதில் போட்டி ஏற்பட்டிருப்பதுதான் பெரும் சோகம்.
கணவரை பிரிந்து வாழும் மனைவி ஒருவர், விபத்தில் தன்னுடைய கணவர் உயிரிழந்து விட்டதாக ஒரு சடலத்திற்கு உரிமை கோரவே, ஒடிசா அரசு சடலத்தை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தது. விஷயம் தெரிந்து, அவரது கணவர் வந்து வாக்குவாதத்தில் இறங்கிய பின்னரே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கணவர் இறந்துவிட்டதாக கூறி, இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இத்தகைய சிக்கல்களை தவிர்க்க, புவனேஸ்வரில் உள்ள ஏஐஎம்ஸ் மருத்தவமனை அனைத்து உடல்களுக்கும் டி.என்.ஏரி பரிசோதனை நடத்தியிருக்கிறது. ஏறக்குறைய 50 உடல்களின் டி.என்.ஏ சாம்பிள்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், முடிவுகள் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகும்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஒருவர் தன்னுடைய மகனின் சடலம் பீகாரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் புகார் அளித்திருக்கிறார். சடலத்தின் அடையாளத்தை உறுதி செய்ய டி.என்.ஏ டெஸ்ட் எடுக்குமாறு சொன்னார்கள். அதையும் செய்து முடித்தோம். ஆனாலும், டி.என்.ஏ அறிக்கை வருவதற்குள்ளாகவே என்னுடைய மகனின் சடலத்தை பீகாரில் யாரிடமோ ஒப்படைத்துவிட்டார்கள் என்று பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
பீகாரின் பாகமதி ஆற்றை கடக்கும் ஏற்பட்ட ரயில் விபத்துதான் இதுவரையிலான விபத்துகளில் மோசமானது. 1981ல் நடந்த அந்த ரயில் விபத்தில் ரயிலின் கடைசி 7 பெட்டிகளும் ஆற்றுக்குள் சரிந்தன. ஆற்றில் வெள்ள நீர் ஓடிக்கொண்டிருந்த காரணத்தால் உடல்கள் அடித்து செல்லப்பட்டன. ரயில் பெட்டிகளில் பயணம் செய்தவர்களில் 286 உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. எஞ்சிய 300 பேரின் கதி இன்று வரை தெரியவில்லை.