ஒடிசா ரயில் விபத்து - இறந்தவர்களை அடையாளம் காணுவதில் தொடரும் சிக்கல்!

ஒடிசா ரயில் விபத்து - இறந்தவர்களை அடையாளம் காணுவதில் தொடரும் சிக்கல்!

கடந்த வாரம் ஓடிசாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை ஒடிசா அரசு நான்கு நாட்களாக தொடர்ந்து செய்து வருகிறது. இதுவரை 176 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏறக்குறைய 100 சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதால் சிக்கல் நீடிக்கிறது.

176 சடலங்களில் 91 புவனேஸ்வரிலும், 85 பாலாசோரிலும் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா, சடலங்களை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் பணியில் ஒடிசா நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இறப்புச் சான்றிதழை உடனடியாக இமெயில் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப்பட்டு வருகின்றன.

எஞ்சியுள்ள 100 சடங்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. புவேனஸ்வர், பாலாசோரில் கையில் புகைப்படத்தோடு தங்களுடைய உறவினர்களை தேடுபவர்கள் நிறைய பேர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். பல உறவினர்களிடம் பலியானவர்களின் சரியான புகைப்படம் கூட இல்லாத நிலைதான் இருக்கிறது.

இதே நிலை நீடித்தால் சடலங்களின் நிலைமை மோசமாகக்கூடும். 100 சடலங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வசதி, ஒடிசா மருத்துவமனைகளில் இல்லை என்கிறார்கள். இதற்காக பாரதீப் துறைமுகத்திலிருந்து 5 கண்டெயினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 30 சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஷாலிமர் முதல் பாலாசோர் வரையிலான ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் அனைவரின் தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன. அங்குள்ள சி.சி.டி.வி காமிரா வழியாக பெறப்படும் படங்களோடு ஒப்பிட்டு சடலங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. பாலாசோரில் ஏறியவர்களின் சடலங்கள் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. பிற ரயில் நிலையங்களின் ஏறியவர்களின் சடலங்கள் புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து சடலங்களையும் டி.என்.ஏ டெஸ்ட் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சடலங்களை ஓரளவு அடையாளம் காண முடிந்தால் மட்டுமே டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ள முடியும் என்பதால் அதிலும் சிக்கல் நீடிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1200 பேரில் 100 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். சிகிச்சையில் உள்ள 200 பேரில் யாரும் அபாய கட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com