இங்கிலாந்தில் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா!

இங்கிலாந்தில் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா!

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டிக்கொள்ளும் விழா அபே பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று நடைபெறும் கோலாகல விழாவில் அந்த நாட்டின் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்படுகிறார். இதில் இந்திய அரசு சார்பில் துணைக் குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார்.

இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் இன்று நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மீகன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பாரம்பரிய விழா பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையிலான ஊர்வலத்துடன் தொடங்கும். மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் குளிர்சாதன வசதியும், மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர்.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் விழா தொடங்கும். 700 ஆண்டு கால பழமையான இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அதை தொடர்ந்து சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் 3-ம் சார்லஸ் உறுதிமொழி எடுப்பார்.

அதன்படி `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முடிசூட்டு விழாவில் தீவிர பங்களிப்பை வழங்கும் இங்கிலாந்து ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மன்னர் சார்லசின் நன்றி பரிசாக பதக்கங்கள் வழங்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 4 லட்சம் சிறப்பு முடிசூட்டு விழா பதக்கங்கள் தயார் செய்யப் பட்டுள்ளதாகவும், பதக்கத்தின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவின் இரட்டை உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com