சூனியம் செய்ததாக கருதி முதியவர்கள் அடித்து கொலை!

சூனியம் செய்ததாக கருதி முதியவர்கள் அடித்து கொலை!
கார்த்திகா வாசுதேவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ஜார்கண்ட் மாநிலத்தில் சூனியம் செய்ததாகக் கருதி வயதான தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் சூனியம் செய்ததாகக் கூறி வயதான தம்பதி அடித்துக் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 2ம் தேதி இரவு மாந்திரீகம் செய்ததாகக் கூறப்படும் தம்பதி சிபல் கஞ்சு (70) மற்றும் அவரது மனைவி பவ்னி தேவி (65) ஆகியோரை சிலர் வலுக்கட்டாயமாக ஹெஸ்லா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு இழுத்துச் சென்று லத்தியால் அடித்துக் கொன்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தம்பதியர் இறந்த பிறகு, அவர்களது உடலை வீட்டில் வீசிவிட்டு மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை அந்த கிராமத்தைச் சேர்ந்தோரில் சிலர் அடித்து உதைத்தனர் என்று கூறப்படுகிறது.

கிராமத்தினரை எதிர்க்க முடியாமல் தாக்குதலின் போது காயமடைந்த அந்தக் குடும்பத்தினர் மே 3ம் தேதி காலை, தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக லதேஹர் காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சனி அஞ்சன் தெரிவித்தார்.

"நாங்கள் சாத்தியமான எல்லா கோணங்களிலும் இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறோம், மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களைப் பிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளோம்," என்று எஸ்பி மேலும் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com