ஆட்சியரின் காலில் விழ முயன்ற மூதாட்டிகள் - தடுத்து நிறுத்திய ஆட்சியர்!

ஆட்சியரின் காலில் விழ முயன்ற மூதாட்டிகள் - தடுத்து நிறுத்திய ஆட்சியர்!
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சார வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிப்பர். அவ்வாறு பொது மக்கள் வழங்கப்படும் மனு மீது துறைச் சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படுவது வழக்கம்.

இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருப்புக்குழி, சிறுகாவேரிப்பாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 நபர்களுக்கு 38 லட்சத்து 97 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், இதே போல் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் குறுவட்டம் கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 13 நபர்களுக்கு 5லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.

அப்போது வீட்டுமனைப் பட்டா பெற வேண்டி விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்த மூதாட்டிகள் இருவக்கு வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அப்போது உணர்ச்சி வசப்பட்ட மூதாட்டிகள் எதிர்பாராத விதமாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது காலில் விழ முயன்றனர். இதனை சற்றும் எதிர்பாராத மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு,

"என் அம்மா வயதிலுள்ள நீங்கள் எல்லாம் என் காலில் எல்லாம் விழக் கூடாது. என் கடமையை தான் நான் செய்தேன்!" என்று மூதாட்டிகள் தன் காலில் விழுவதை தடுத்து நிறுத்தியச் செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மூதாட்டிகள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழ முயன்ற சம்பவம் கூட்டரங்கில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com