தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னைக்கு திரும்பும் நிலையில், தனியார் பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
2023ஆம் ஆண்டு குழந்தைகளுக்கும், அலுவலகங்களில் பணிப்புரியும் நபர்களுக்கும் ஒரே நேரத்தில் நிறைய விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் செப்டம்பர் மாத இறுதியில் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் இவர்களுக்கு சாதகமாக மிலாடி, காந்தி ஜெயந்தி, வாரவிடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளனர். விடுமுறை இன்றோடு முடிவடைந்த நிலையில், நாளை சென்னை திரும்ப பலரும் இன்று டிக்கெட் புக் செய்து வருகின்றனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
நெல்லை - சென்னை பேருந்து கட்டணம் ரூ.4,000
நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல்லை - சென்னைக்கு இடையே 16 தனியார் பேருந்துகள் ரூ.2,000 முதல் ரூ.2, 500 வரை வசூலிக்கின்றன. இதே போன்று, 14 தனியார் பேருந்துகளில் ரூ.2,500 - ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
மதுரை - சென்னை பேருந்து கட்டணம் ரூ. 3.600
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3,600 கட்டணம் தனியார் பேருந்துகள் வசூப்பதாக பயணிகள் குமுறுகின்றனர். மதுரை - சென்னைக்கு இடையே 41 பேருந்துகளில் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கின்றன. மதுரை - சென்னைக்கு இடையே 12 பேருந்துகளில் ரூ.2,500 - ரூ.3,600 வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை - கோவை பேருந்து கட்டணம் ரூ.5,000
கோவை - சென்னை இடையே அதிகபட்சமாக 2பேருந்துகளில் ரூ. 5,000 டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை - சென்னைக்கு இடையே 28 பேருந்துகளில் ரூ.2,000 - ரூ.2,840 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் - சென்னை இடையே 20 தனியார் பேருந்துகளில் ரூ.2000-க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - சென்னை இடையே அதிகபட்சமாக ரூ.3,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களின் போது ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.