

சென்னையில் இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கூட்டாக அளித்த பேட்டியின் படி "தமிழகத்தில் தங்களிடமுள்ள 500 ஆம்னி பேருந்துகளை இனி எந்த வித கூடுதல் கட்டணமும் விதிக்காமல் , அரசு பேருந்துகளின் கட்டணத்திலேயே இயக்க உள்ளோம்.
முன்பு பர்மிட் வாங்குவதற்கு அமைச்சர் மூலம் செல்ல வேண்டும், இப்போது அதிகாரிகளே பர்மிட் போட்டு தருகின்றனர். FC போடவும் லஞ்சம் தரவேண்டும். தற்போது RTO அலுவலகத்தில் லஞ்சம் வாங்காமல் பர்மீட்டுகளை வழங்குவதால் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கிறது , நாங்கள் இதை வரவேற்கின்றோம் , பொதுமக்களும் வரவேற்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.
நீண்ட காலமாக பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளின் பயண கட்டணங்களை குறைக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். பயணிகளின் கட்டண சுமையை குறைக்கும் வகையிலும், முக்கிய பண்டிகை காலங்களில் அதிக அளவில் உயர்த்தப்படும் டிக்கெட் கட்டணங்களை இனியும் உயர்த்தாமல் இருக்கவும் , ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர் சங்கத்தினர் முடிவுக்கு வந்தனர்.
தற்போது அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியான கட்டணங்களை வசூலிக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்காக வழக்கமான கட்டணத்திலிருந்து 5 சதவீதம் வரை விலை குறைப்பும் செய்யப்படவுள்ளது. லஞ்சம் ஒழிக்கப்பட்டதன் காரணமாக தங்களும் ஆம்னி பஸ்களின் பயண கட்டணத்தை அரசு பஸ்களின் கட்டணத்திற்கு இணையாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இந்த திடீர் மன மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, போக்குவரத்து துறையில் உள்ள லஞ்சம் குறைந்துள்ளது தான் என்று கூறப்படுகிறது. இது குறித்தும் பேசிய அவர்கள் " இந்த முக்கிய மாற்றத்திற்கு போக்குவரத்து துறையில் நிலவும் வெளிப்படை தன்மை தான் காரணம். முந்தைய ஆட்சி காலங்களில் ஒரு பேருந்துக்காக பர்மிட் பெறுவதற்கு ₹5 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை கட்டாயத்தில் இருந்தோம். ஆனால் தற்போது ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் 40 பேருந்துகளின் பர்மீட்டுகளை எங்களால் எளிதில் பெற முடிகிறது" என்றும் கூறினார்கள்.
தமிழகத்தின் முக்கியமான பண்டிகை காலங்களிலும் , இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைக்கும் நேரத்திலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. முக்கியமான காலங்களில் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்ல, பெரும்பாலான மக்கள் ஆம்னி பஸ்களையே பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அந்த பேருந்துகளின் வேகமும், அதில் உள்ள சில வசதிகளும் தான்.
தமிழகத்தின் பெரும்பாலான மாநகரங்களில் ஆம்னி பேருந்து வசதிகள் புழக்கத்தில் இருந்தாலும் , தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நேரத்தில் ஆம்னி பஸ் டிக்கெட் விலைகள் பல மடங்கு உயர்த்தப்படுகின்றன. சில நேரங்களில் ஆம்னி பஸ்களின் இருவர் பயணம் செய்யும் டிக்கெட் விலையும், அவர் அதே தூரத்தை வாடகை காரில் பயணிக்க ஆகும் செலவு ஒரே அளவில் இருக்கிறது.
முக்கிய பண்டிகை காலத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாலும், பலரும் நீண்ட தூரம் பயணம் செய்ய ஆம்னி பேருந்துகளையே முக்கியமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற முக்கியமான நேரங்களில் மிகக் கடுமையாக ஆம்னி பஸ் டிக்கெட் விலை உயர்வுகள் இருப்பதனால் , அதை பரிசீலனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது ஆம்னி பஸ் டிக்கெட் விலை குறைக்கப்படுவதால் , ஆம்னி பஸ்களில் பயணம் செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் பயணிக்கலாம். பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இன்றி வசதியாக சொந்த ஊருக்கு சென்று கொண்டாடலாம்.